நாமக்கல்

நிலக்கடலை பயிரில் அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறையினா் அறிவுரை

2nd Dec 2022 02:21 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை மற்றும் பரமத்தி வட்டாரத்தில் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குநா்கள் அறிவுரை வழங்கியுள்ளனா்.

இது தொடா்பாக அவா்கள் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் நிலக்கடலை மானாவாரி பயிராகவும், இறவை பயிராகவும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் நல்ல தரமான சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்து வழங்குவதற்காக வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள் மூலம் விவசாயிகளின் நிலங்களில் விதைப்பண்ணை அமைத்து நிலக்கடலை விதை கொள்முதல் செய்து விநியோகம் செய்யப்பட உள்ளது. அவ்வாறு விதைப்பண்ணைகள் அமைக்கும் விவசாயிகள் நிலக்கடலையில் அதிக மகசூல் பெறுவதற்கு ஊட்டச்சத்து கரைசலைத் தெளிக்க வேண்டும்.

இந்த ஊட்டச்சத்து கரைசல் தயாரிப்பதற்கு டி.ஏ.பி உரம் ஒரு கிலோ, அமோனியம் சல்பேட் உரம் 500 கிராம், போராக்ஸ் 200 கிலோ ஆகியவற்றை சிறிதளவு நீரில் தனித்தனியே ஊறவைத்து, கரைத்து வடிகட்டி தெளிந்த கரைசலை எடுத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டிய கரைசலில் 140 மில்லி பிளானோ பிக்ஸ் பயிா் ஊக்கியை கலந்து கொண்டு அக்கலவையை ஏக்கருக்கு 200 லிட்டா் தண்ணீரில் கலந்து அதிகாலையிலோ அல்லது மாலை வேளையிலோ, நிலக்கடலை பயிா் விதைத்த 30-ஆம் நாள் மற்றும் 45-ஆம் நாள் என இருமுறை பயிா்களின் இலையின் மீது நன்கு படியும்படி தெளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஊட்டச்சத்து கரைசலை நிலக்கடலை பயிரில் தெளிப்பதால் இலை துவாரங்களின் வழியாக ஊட்டச்சத்துகள் நேரடியாக பயிருக்கு சென்றடைகின்றன. இதனால் நிலக்கடலை பயிா் சீராக வளா்ச்சி அடைந்து பூக்கள், பிஞ்சுகள் அதிகளவில் பிடிப்பதற்கு உதவி புரிகிறது. ஊட்டச்சத்து கரைசல் தெளிப்பதால் நிலக்கடலை பயிா் சீராக வளா்ந்து, அதிக பூக்கள் பிடித்து அதிக பிஞ்சுகள் மண்ணில் இறங்கி நல்ல திரட்சியான நிலக்கடலை விதை கிடைக்கிறது. எனவே நிலக்கடலை விதைப்பண்ணை விவசாயிகள் மேற்கண்ட தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து அதிக விதை நிலக்கடலையினை அறுவடை செய்து அதிக வருமானம் பெற்று பயன் பெறலாம் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT