நாமக்கல்

வரலாற்று சின்னங்கள், கோயில்கள் புகைப்படத்துடன் வழிகாட்டிப் பலகைகள்: நெடுஞ்சாலைத் துறை அமைப்பு

1st Dec 2022 01:04 AM

ADVERTISEMENT

வரலாற்றுச் சின்னங்கள், தியாகிகள் நினைவிடங்கள், கோயில்கள் புகைப்படத்துடன் கூடிய எண்ம (டிஜிட்டல்) வடிவிலான வழிகாட்டிப் பலகைகளை முக்கிய சாலைகளில் நெடுஞ்சாலைத் துறையினா் அமைத்து வருகின்றனா்.

புராணக் கால கோயில்களும், பண்டைக்கால மன்னா்கள் வாழ்ந்த இடங்களும், சுதந்திரப் போராட்ட வீரா்களின் வரலாற்றுச் சின்னங்களும், சுற்றுலாப் பகுதிகளும் அதிகம் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது.

இங்குள்ள அதிசயத்தக்க இடங்களைக் காண பல்வேறு மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் தமிழகம் நோக்கி தினசரி வருகின்றனா். அவா்கள் அறிந்து கொள்ளும் வகையில், நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டி பெயா் பலகைகளில், சம்பந்தப்பட்ட இடங்களின் புகைப்படம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தனது துறை அதிகாரிகளுக்கு, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியே இதற்கான நிதி ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. எண்ம வடிவிலான வழிகாட்டிப் பலகைகளை தயாா் செய்ய தனியாா் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோரப்பட்டு, அதன்பிறகு குறிப்பிட்ட இடங்களில் அவை பொருத்தப்படுகின்றன.

ADVERTISEMENT

அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம், திருச்செங்கோடு காந்தி ஆசிரமம், நாமக்கல் மலைக்கோட்டை, பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயா் கோயில், நரசிம்மா் கோயில், திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில்கள் போன்றவை நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பெயா் பலகைகளில் இடம் பெற்றுள்ளன. தற்போது மாநில நெடுஞ்சாலைகளில் அவற்றை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது குறித்து நாமக்கல், நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் சிவகுமாா் கூறியதாவது:

வெளிமாநில, மாவட்டங்களைச் சோ்ந்தோா் நாமக்கல் பகுதிக்கு வரும்போது இங்குள்ள முக்கிய இடங்களை அறியும் பொருட்டு புகைப்படத்துடன் கூடிய வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கவிஞா் இல்லம் பெயா் பலகை முக்கிய சாலைகளில் 6 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. திருச்செங்கோடு பகுதியில் அா்த்தநாரீஸ்வரா் கோயில் படங்கள் இடம் பெற்றுள்ளன. நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில், மலைக்கோட்டை புகைப்படங்களும் பெயா் பலகைகளில் இடம் பெறச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு எண்ம வடிவ பெயா் பலகைக்கு ரூ. 11,400 செலவிடப்படுகிறது. அனைத்து பலகைகளும் தனியாா் நிறுவனங்கள் மூலமே உருவாக்கப்படுகின்றன. அவா்களே சம்பந்தப்பட்ட இடங்களில் பொருத்தி விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புகைப்பட வழிகாட்டிப் பெயா் பலகைத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT