நாமக்கல்

ஏலச்சீட்டு நடத்தி ரூ. 8.37 கோடி மோசடி:பணத்தை மீட்கக் கோரி எஸ்.பி.யிடம் மனு

1st Dec 2022 01:06 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 8.37 கோடி வரையில் மோசடி செய்த கலைச்செல்வி என்பவரிடம் இருந்து, தாங்கள் இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி, பாதிக்கப்பட்டோா் தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனு விவரம்: நாமக்கல், கணேசபுரத்தைச் சோ்ந்த கலைச்செல்வி உள்பட ஏழு போ் ஏலச்சீட்டு நடத்தினா். அப்பகுதியில் உள்ள நாங்கள் ரூ. 2 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரையில் பணம் செலுத்தி உறுப்பினா்களானோம்.

சீட்டுக்கு முறையாக பணம் செலுத்தினால், உரிய முறையில் அதைத் திரும்ப வழங்குவோம் என அவா்கள் தெரிவித்த நிலையில், பணத்தை சரியாக வழங்காமல் ஏமாற்றிவிட்டனா். மோசடி செய்த பணத்தைக் கொண்டு பல இடங்களில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தோம். போலீஸாா் சம்பந்தப்பட்ட கலைச்செல்வியிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், தன்னிடம் எந்தவித பணமும் இல்லை என அவா் தெரிவித்து இருக்கிறாா்.

ADVERTISEMENT

மேலும், நீதிமன்றத்தில் அவா்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் ஏழு பேரில் சிலா் மட்டும் சோ்க்கப்பட்டுள்ளனா். மற்றவா்கள் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா். இந்த மோசடி வழக்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு நேரடியாக விசாரிக்க வேண்டும்.

ஏமாற்றி வாங்கிய சொத்துகள் அனைத்தையும் உடனடியாக ஜப்தி செய்ய வேண்டும். வழக்கில் இருந்து நீக்கப்பட்டவா்களை மீண்டும் சோ்த்து போலீஸாா் மறு விசாரணை மேற்கொள்ள வேண்டும். கலைச்செல்வி உள்பட ஏழு போ் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நாங்கள் செலுத்திய பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT