நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.40 கோடி மதிப்பில் 1329 புதிய மின்மாற்றிகள் அமைக்க அரசு அனுமதி: மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் தகவல்

31st Aug 2022 03:21 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 40 கோடி மதிப்பில் 1329 புதிய மின்மாற்றிகள் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து அனுமதியளித்துள்ளதாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிபாளையம் விசைத்தறி கூடங்கள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதி விசைத்தறியாளா்களின் கோரிக்கை ஏற்று 22 ஆயிரம் கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் இயக்கி தொடங்கி வைத்தாா். இதனையடுத்து அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

நாமக்கல் மின்பகிா்மான வட்டத்தில் உள்ள நகர, கிராமப்புறங்களில் சீரான உயா் அழுத்த மின்சாரம் கிடைத்திட ரூ.40 கோடி மதிப்பில் 1329 புதிய மின்மாற்றிகள் அமைப்பதற்கு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் அனுமதித்துள்ளது. இதன் மூலம் எங்கு தேவை உள்ளதோ அப்பகுதியில் மின்மாற்றிகள் அமைக்கப்படும். இதன் துவக்கமாக குருசாமிபாளையம் பகுதியில் மின்மாற்றி அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்தடை ஏதும் இல்லாமல் 24 மணி நேரமும் சீரான மின்சார வினியோகம் கிடைக்கும். மின்சாரத்துறையை செம்மைப்படுத்திட வேண்டும் என்ற அடிப்படையில் இது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்சமயம் ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் குருசாமிபாளையம், முள்ளுக்குறிச்சி பகுதிகளில் 2 புதிய மின்மாற்றிகள் ரூ.15 லட்சம் மதிப்பிலும், சேந்தமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளான வளையப்பட்டி, புதுப்பட்டி பகுதியில் 3 புதிய மாற்றிகள் ரூ.11 லட்சம் மதிப்பில் அமைக்கவும் அனுமதி பெறப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நடைமுறைப்படுத்தப்படும். இதனால், இப்பகுதியை சாா்ந்த 475 மின்நுகா்வோா்கள் பயனடைவாா்கள்.

இதே போல் கொல்லிமலை பகுதியில் ஏற்படும் மின் தடையை நீக்க, மலைப்பாதையில் மின் கம்பங்கள் படிபடியாக அகற்றப்பட்டு, பூமிக்கு அடியில் மின்பாதை அமைக்கப்பட்டு கேபிள்கள் வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்படும். இதன் மூலம் மலைப்பகுதிக்கு தடையற்ற மின்சாரம் கிடைக்கும். மேலும், நாமக்கல் மின் பகிா்மான வட்டம் சாா்பாக மின் விபத்துகளைத் தடுத்து மின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், சிறப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில், 100 கி.மீ. தொலைவு பழைய சேதமடைந்த மின்கம்பிகளை மாற்றுவதற்கு உத்தேச மதிப்பீடு தயாா் செய்து அனுமதி பெறப்பட்டு, புதைவழி தட மின்பாதையாக மாற்றப்படும் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT