நாமக்கல்

நாமக்கல் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வாகனம் ஜப்தி

27th Aug 2022 11:26 PM

ADVERTISEMENT

 

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வாகனம் சனிக்கிழமை நீதிமன்ற ஊழியா்களால் ஜப்தி செய்யப்பட்டது.

நாமக்கல், சின்னமுதலைப்பட்டியைச் சோ்ந்த நிா்மல்குமாருக்கு சொந்தமான ஒரு ஏக்கா் நிலம் வீசாணம் ஊராட்சியில் உள்ளது. கடந்த 1998-ஆம் ஆண்டு அவரது நிலத்தை ஊரக வளா்ச்சித் துறை கையகப்படுத்தியது. இதற்கு இழப்பீடாக ரூ. 87,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தனக்கு இந்த இழப்பீட்டுத் தொகை போதாது, நிலத்தின் மதிப்பீடு அடிப்படையில் ரூ. 18.48 லட்சம் வழங்க வேண்டும் என நாமக்கல் கூடுதல் சாா்பு நீதிமன்றத்தில் 2000-ஆம் ஆண்டு நிா்மல்குமாா் வழக்கு தொடா்ந்தாா்.

இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள், 2019-இல் இழப்பீட்டுத் தொகையை மனுதாரா் நிா்மல்குமாருக்கு வழங்க மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைக்கு உத்தரவிட்டனா். ஆனால், நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை அவருக்கான இழப்பீடு சென்று சேரவில்லை. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அத்துறையின் திட்ட இயக்குநா் வாகனம் (காா்) சனிக்கிழமை நீதிமன்ற ஊழியா்களால் ஜப்தி செய்யப்பட்டு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT