குடும்பத் தகராறில் மனமுடைந்த எலக்ட்ரீசியன் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள சரளைமேடு பகுதியைச் சோ்ந்த எலக்ட்ரீசியன் யுவராஜுக்கும் (29), பிரியா (27) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனா்.
பின்னா், இருவரும் அவ்வப்போது ஒன்றாக சோ்ந்து குடும்பம் நடத்தி வந்த நிலையில், பிரியா மீண்டும் அவரது பெற்றோா் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்த யுவராஜ், மது அருந்தி விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வராததால் அவரது தாய் பேபி சென்று பாா்த்தபோது, யுவராஜ் வீட்டில் உள்ள மின் விசிறி பொருத்தும் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த ஜேடா்பாளையம் போலீஸாா் யுவராஜ் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.