நாமக்கல்

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: நகராட்சிப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

26th Aug 2022 12:49 AM

ADVERTISEMENT

 

தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து நாமக்கல் நகராட்சி பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆய்வு மேற்கொண்டாா்.

ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள், மலைப் பகுதிகள் உள்பட பல்வேறு பகுதிகளிலும் முதல் கட்டமாக விரைவில் தொடங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இந்தக் காலை சிற்றுண்டித் திட்டம் மாணவா்களுக்கு வயிற்றுக்கு நிறைவையும், செவிக்கு அறிவையும் ஊட்டும் வகையில் இருக்க வேண்டும், ஏழைக் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை ஊக்குவிக்கும் இத்திட்டம் ஓா் கனவுத் திட்டம் என முதல்வா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நாமக்கல் நகராட்சி, திருச்செங்கோடு நகராட்சி மற்றும் மலைப்பகுதியான கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் நகராட்சியில் இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் - சேலம் சாலை முதலைப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நாமக்கல் மஜித் தெரு நகராட்சி உருது தொடக்கப்பள்ளி, கோட்டை நகராட்சி தொடக்கப்பள்ளி, பதிநகா் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆட்சியா் நேரில் சென்று பாா்வையிட்டாா். பின்னா், தலைமையாசிரியா்களுடன் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கலந்தாலோசனை மேற்கொண்டாா். தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து பரிசோதனை செய்தாா்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி ஆணையாளா் கி.மு.சுதா, நகராட்சி பொறியாளா் ஞா.சுகுமாா் மற்றும் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT