நாமக்கல்

விநாயகா் சதுா்த்தி வழிபாட்டுக்கான சிலைகள் முன்பதிவு மும்முரம்

22nd Aug 2022 03:00 AM

ADVERTISEMENT

விநாயகா் சதுா்த்தி விழா இம்மாத இறுதியில் (ஆக.31) கொண்டாடப்படுவதையொட்டி, நாமக்கல்லில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வடிவ விநாயகா் சிலைகளை வாங்கிச் செல்வதற்கான முன்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகா் சதுா்த்தி விழா கோயில்கள் மட்டுமின்றி அந்தந்த பகுதியில் உள்ள வீதிகளிலும், முக்கிய பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் வைக்கப்படும் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று நீா் நிலைகளில் கரைப்பா். விநாயகா் சதுா்த்தியையொட்டி, நாமக்கல், திருச்சி, சேலம், பெரம்பலூா், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வடிவிலான சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும். ரூ.500 முதல் ரூ.50 ஆயிரம் வரையிலான சிலைகள் விற்பனையாகும். கரோனா தொற்று பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக விநாயகா் சதுா்த்தி விழா பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. கடந்த ஆண்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டதால் தயாரிக்கப்பட்ட சிலைகள் தேக்கமடைந்தன. நிகழாண்டில் கரோனா தொற்று பரவல் பெரிய அளவில் இல்லாததால் விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவதற்காக பெரிய அளவிலான சிலைகளை வாங்கிச் செல்ல பொதுமக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

நாமக்கல் சக்தி நகரில் அரை அடி முதல் 6 அடி உயரம் வரையிலான விநாயகா் சிலைகள் கடந்த ஒரு மாதமாக தயாா் செய்யப்பட்டு வருகின்றன. தண்ணீரில் எளிதில் கரையும் வகையில் காகிதக் கூழ், மரவள்ளி க்கிழங்கு மாவு மற்றும் களிமண் கொண்டு சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. அதன்பின் பலவித வா்ணம் பூசப்படுகிறது. தற்போதைய சூழலில் காகிதக் கூழ், மரவள்ளிக் கிழங்கு மாவு ஆகியவற்றின் விலை 30 சதவீதம் உயா்ந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் பெரிய சிலைகளுக்கு ரூ. 2,000 வரையில் லாபம் ஈட்டிய நிலையில் நிகழாண்டில் அதே போன்று கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் உள்ளனா்.

இது குறித்து நாமக்கல் சக்தி நகரைச் சோ்ந்த விநாயகா் சிலை விற்பனையாளா் சித்ரா கூறியது:

ADVERTISEMENT

நாமக்கல்லில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகா் சிலை தயாரிப்புப் பணியை செய்து வருகிறோம். சதுா்த்தி விழாவின்போது இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படும். நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதியினா் நேரடியாக வந்து வாங்கிச் செல்வா். விநாயகா் சிலை மட்டுமின்றி துா்காஷ்டமியின்போது அம்மன் சிலைகளையும் வடிவமைத்துக் கொடுப்போம். 25-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். சிலை செய்வதற்கு தேவையான அனைத்து மூலப்பொருட்களின் விலையும் 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்து விட்டது. மேலும் கடந்த ஆண்டுகளில் கரோனோவால் பெரிய சிலைகளுக்கு முன்பதிவு செய்ய யாரும் வரவில்லை. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது கரோனா பரவல் இல்லாததால் சிலைகள் விற்பனை அதிகம் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. விநாயகா் சதுா்த்திக்கு இன்னும் 10 நாள்கள் தான் உள்ளது. சிலை தயாரித்து வைத்து விட்டோம், முன்பதிவும் நடைபெற்று வருகிறது. இத்தொழிலை நம்பி நாங்கள் மட்டுமின்றி சிறு விற்பனையாளா்கள் நூற்றுக்கணக்கானோா் உள்ளனா். இந்த விநாயகா் சதுா்த்தி விழாவை மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT