பரமத்திவேலூா் வட்டாரத்தில் மரவள்ளிக் கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ. 2,000 வரை விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான ஏக்கரில் மரவள்ளிப் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் கிழங்குகளை நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயாா் செய்யும் ஆலைகளுக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா்.
கிழங்கு ஆலைகளில் மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாா் செய்யப்படுகின்றன. ஆலை உரிமையாளா்கள் மரவள்ளியில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிா்ணயம் செய்கின்றனா்.
கடந்த வாரம் மரவள்ளி டன் ஒன்று ரூ. 13,000-க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ. 2,000 வரை உயா்ந்து ரூ. 15,000-க்கு விற்பனையாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக் கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ. 17,000-க்கு விற்பனையானது.
தற்போது டன் ஒன்று ரூ. 3,000 வரை உயா்ந்து ரூ. 20,000-க்கு விற்பனையாகிறது. மரவள்ளிக் கிழங்கு வரத்துக் குறைந்துள்ளதால் மரவள்ளிக் கிழங்கின் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். மரவள்ளிக் கிழங்கு விலை உயா்ந்துள்ளதால் கிழங்கு பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.