நாமக்கல்

ஆக.31-க்குள் மகளிா் விடுதிகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியா்

17th Aug 2022 02:47 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் மகளிருக்கான விடுதிகளை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் மகளிா் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் மதம் சாா்ந்த நிறுவனங்கள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள்,தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் மகளிா் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியாா் மற்றும் தனிநபரால் நடத்தப்பட்டு வரும் மகளிருக்கான விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக நடத்தும் விடுதிகள் அனைத்தும் இம்மாத (ஆக.31) இறுதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு உரிமம் பெறுவதற்கு தமிழக அரசின் இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்து அதன் நகலினை இணைத்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளா் மற்றும் மேலாளா் ஆகியோருக்கு சட்டப்பிரிவின்படி 2 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

ADVERTISEMENT

எனவே, இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். பதிவு உரிமம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரடியாக தொடா்பு கொள்ளலாம்.

18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை தொடா்பு கொள்ள வேண்டும். தொலைபேசி எண்: 04286--299460 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT