நாமக்கல்

நாமக்கல்லில் சுதந்திர நாள் கொண்டாட்டம்: ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தேசியக் கொடி ஏற்றினார்

15th Aug 2022 10:48 AM

ADVERTISEMENT

நாமக்கல்: நாமக்கல்லில் சுதந்திர நாளையொட்டி மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் திங்கள்கிழமை தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

நாட்டின் சுதந்திர நாள் விழா நாமக்கல் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டுத் திடலில் இன்று நடைபெற்றது. சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சுதந்திர நாள் விழாவை கொண்டாடும் விதமாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி ஆகியோர் வெண் புறாக்களையும், வண்ணப் பலூன்களையும் வானில் பறக்க விட்டனர்.

பின்னர் அணிவகுப்பினை சிறப்பாக நடத்தியதற்காக 14 ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினருக்கும், காவல்துறை பேண்ட் வாத்தியக் குழுவினருக்கும்  மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்து, கேடயங்களை வழங்கினார்.

ADVERTISEMENT

மேலும் சிறப்பாக பணியாற்றிய 40 காவல்துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.

மேலும், பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 103 அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், அவர்களது பணியினை பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் தலா ரூ.500 மதிப்பிலான புத்தகங்கள் வாங்கிக் கொள்வதற்கான பரிசு அட்டைகளையும் ஆட்சியர் வழங்கினார்.

சுதந்திர நாள் விழாவில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் பயனாளிக்கு ரூ.25,000-க்கான திருமண நிதியுதவி காசோலையையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மொத்தம் 33 பயனாளிகளுக்கு ரூ.7,80,000-க்கான நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3,82,500 மதிப்பிலான பெட்ரோல் மோட்டார் சைக்கிள்களையும், தாட்கோ திட்டத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.5,52,294 க்கான கடனுதவி காசோலையையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 55 பயனாளிகளுக்கு ரூ.3,41,915 மதிப்பிலான இலவச தையல் இயந்திரம் மற்றும் சலவை பெட்டிகளையும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.13,63,920 மதிப்பிலான வேளாண் இயந்திரங்களையும், வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.18,191 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மகளிர் திட்டதுறையின் சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்திற்கான வங்கிக் கடனுதவி காசோலைகளையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.60 லட்சத்திற்கான கடனுதவி காசோலைகளையும், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு ரூ.79 லட்சத்திற்கான கடனுதவி காசோலைகளையும், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் என மொத்தம் 146 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே, 97 லட்சத்து, 63 ஆயிரத்து, 820 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்  வழங்கினார்.

சுதந்திர நாள் விழாவில் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள், ரெட்டிப்பட்டி பாரதி கல்வி நிறுவன மாணவ, மாணவிகள், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள், பரமத்தி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஏ.கே.சமுத்திரம் ஞானோதயா சி.பி.எஸ்.சி பள்ளி மாணவ, மாணவியர்கள், வேலகவுண்டம்பட்டி கொங்கு நாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், பாச்சல் பாவை கல்லூரி மாணவ, மாணவிகள் என மொத்தம் 708 மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் தலா ரூ.300 மதிப்பிலான புத்தகங்கள் வாங்கிக் கொள்வதற்கான பரிசு அட்டைகளையும், பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் உலக நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு வகையான வரைபடங்கள் அடங்கிய வரைபட (அட்லஸ்) புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 

இதையும் படிக்க: சென்னையில் காந்தி சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

இந்த விழாவில் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT