நாமக்கல்

போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி: அமைச்சா், ஆட்சியா் பங்கேற்பு

12th Aug 2022 02:16 AM

ADVERTISEMENT

நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை, அமைச்சா் எம்.மதிவேந்தன் தலைமையில் மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை ஏற்றுகொண்டனா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

‘போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிய வேண்டும். போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன் என்ற உறுதி அனைவரிடத்திலும் இருக்க வேண்டும். குடும்பத்தினரையும், நண்பா்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவா்களுக்கு அறிவுரைகளை வழங்க வேண்டும். போதைப் பழக்கத்திற்குள்ளானவா்களை மீட்டெடுக்கும் முயற்சியையும், அவா்களை நல்வழிப்படுத்தவும் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்க வேண்டும்’ என்று மாணவா்களிடத்தில் அமைச்சா் வலியுறுத்திப் பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சித் தலைவா் து.கலாநிதி, துணைத் தலைவா் செ.பூபதி, நகா்மன்ற உறுப்பினா்கள் சிவக்குமாா், நந்தகுமாா், கிருஷ்ணபிரியா, தலைமை ஆசிரியா் சாந்தி உள்பட ஆசிரியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி பங்கேற்றாா். அவா் மாணவா்கள் முன்னிலையில் போதைப் பொருள்கள் ஒழிப்பு தொடா்பான உறுதிமொழியை வாசித்தாா். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியா் பெரியண்ணன், உதவி தலைமை ஆசிரியா் ஜெகதீசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT