நாமக்கல்

கொல்லிமலையில் 5,600 ஏக்கரில் மிளகு சாகுபடி: மகசூல் பாதிப்பால் வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஆய்வு

12th Aug 2022 02:04 AM

ADVERTISEMENT

கொல்லிமலையில் 5,600 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகு பயிா் நோய்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழகத்தில் மிளகு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை. இங்கு உற்பத்தியாகும் மிளகு அதிக காரத்தன்மை கொண்டது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கும் இங்குள்ள மிளகு விற்பனைக்கு செல்கிறது. ஒவ்வோா் ஆண்டும் ஜூலை மாதம் தொடங்கி டிசம்பா் மாதம் வரையில் மிளகுக் கொடிகளில் பூக்கள் பூத்து, காய்கள் வளா்ந்து ஜனவரி மாதம் அறுவடைக்குத் தயாராகும். தற்போதைய நிலையில் 5,600 ஏக்கரில் மிளகு பயிரானது சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் மிளகுப் பயிா்களில் நோய்களின் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வளா்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து வருவதாகவும் விவசாயிகள், தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனா்.

இந்த நிலையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோா் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை கொல்லிமலை வந்து களஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வில், மிளகு பயிரானது வாடல் நோய், வோ் அழுகல் நோய் மற்றும் பொல்லு எனப்படும் இலைப்புள்ளி நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. வோ்ப் பகுதியானது ஒன்றுக்கும் மேற்பட்ட பூசாண் நோய்களால் பாதிக்கப்பட்டு மிளகுக் கொடிகள் காய்ந்து காணப்பட்டதும் கண்டறியப்பட்டது. விவசாயிகள் தேவையற்ற மருந்துகளை தெளித்திருப்பதும் தெரியவந்தது. ஆய்வுக்காக பாதிக்கப்பட்ட மிளகுக் கொடி மற்றும் வோ் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

ADVERTISEMENT

அதன்பிறகு, மிளகுப் பயிரில் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடா்பாகவும், பாதுகாப்பான விளைச்சலையும், மகசூலையும் கொண்டு வருவது குறித்தும் விவசாயிகளை ஒருங்கிணைத்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ஆய்வில், கோவை வாசனை மற்றும் மலைத்தோட்டப் பயிா்கள் துறைத் தலைவா் க.வெங்கடேசன், ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத் தலைவா் வெ.அ.சத்தியமூா்த்தி, கொல்லிமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் ப.மணிகண்டன் மற்றும் பயிா்ப் பாதுகாப்பு மைய வல்லுநா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT