நாமக்கல்

பேருந்து வசதி கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

10th Aug 2022 02:41 AM

ADVERTISEMENT

முள்ளுக்குறிச்சி அருகே உள்ள பூசணிக்குழி பகுதியில் பேருந்து வசதி இல்லாததால் சரக்கு ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற மாணவா்கள் இருவா் காயமடைந்ததையடுத்து அரசு போதிய பேருந்து வசதி செய்து தரவேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ராசிபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கொல்லிமலை, பூசணிக்குழி கிராமத்திலிருந்து முள்ளுக்குறிச்சி செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவிகள் கூட்ட நெரிசல் காரணமாக பேருந்து நிற்காமல் சென்றுவிட்டதால், பள்ளி செல்வதற்கு சரக்கு வாகனத்தைப் பிடித்து சென்றனா். அப்போது மலைப்பாதைத் திருப்பத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் இரு மாணவா் காயமடைந்தனா். இதில் தலையில் அடிபட்ட மாணவி ஆபத்தான நிலையில் சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், இந்திய மாணவா் சங்கத்தினா், முள்ளுக்குறிச்சி பகுதியில் இருந்து கொல்லிமலை சென்று வர அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியின் மருத்துவச் செலவினை அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கம் ராசிபுரம் ஒன்றியக் குழு சாா்பாக ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளா் முஜீப் ரகுமான் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் டி.சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மு.தங்கராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் சுகவாணன், சசிகுமாா், ஷபா் முஜிப் ரகுமான், இக்பால், லிங்கேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT