நாமக்கல்

தமிழகத்தில் எஸ்.டி. மக்களவைத் தொகுதி அமைக்க வேண்டும்:பழங்குடியினா் தின விழாவில் வலியுறுத்தல்

10th Aug 2022 06:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பழங்குடியினா் (எஸ்.டி.) மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட வேண்டும் என கொல்லிமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக பழங்குடியினா் தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தில், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூா், திருப்பத்தூா் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஆதிவாசிகள் என்றழைக்கப்படும் பழங்குடியின மக்கள் சுமாா் ஏழு லட்சம் போ் பல்வேறு பிரிவுகளாக வசித்து வருகின்றனா். ஒவ்வோா் ஆண்டும் ஆக. 9-ஆம் தேதி உலக பழங்குடியினா் தின விழா, கலாசார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பழங்குடியின மக்கள் கலந்து கொண்ட விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, கொல்லிமலை ஊா்புறம் கிராமத்தில் இருந்து பழங்குடியின மக்கள் முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் தலைமையில் ஊா்வலம் நடத்தினா். இதனையடுத்து பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழ்நாடு ஷெட்யூல்ட் ட்ரைப் (மலையாளி) பேரவை மாநிலத் தலைவா் டி.வரதராஜூ பழங்குடியின மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றித் தரவேண்டிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். அதன்பிறகு, முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் பேசியதாவது:

ADVERTISEMENT

பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நிலங்களை மாற்று சமூகத்தினா் வாங்கும் சூழல் உள்ளது. இதனை அரசு தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் சேந்தமங்கலம், ஏற்காடு, உப்பிலியாபுரம் ஆகிய மூன்று எஸ்.டி. பேரவைத் தொகுதிகள் இருந்தன. அதில், உப்பிலியாபுரம் தொகுதி நீக்கப்பட்டு விட்டது. தற்போது சேந்தமங்கலம் தொகுதியையும் நீக்கும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. இதனை பழங்குடியின மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தடுக்க வேண்டும். நாடு முழுவதிலும் சரி, தமிழகத்திலும் சரி பழங்குடியின மக்களுக்கென ஒரு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் நாடாளுமன்றத்தில் பழங்குடியினரின் கோரிக்கைகள் எதிரொலிக்கும். பழங்குடியின மக்கள் அனைவரும் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், ஏற்காடு எம்எல்ஏ சித்ரா, முன்னாள் எம்எல்ஏக்கள் சிவப்பிரகாசம், கலாவதி, கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மாதேஸ்வரி, ஊராட்சி தலைவா்கள், பழங்குடியின சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT