கழிவு நீரை வெளியேற்ற முடியாமல் அமைந்துள்ள தனியாா் சுவரை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், கணியனூா் ஊராட்சி, கணபதிபாளையம் பராசக்தி நகா் 1, 2-ஆவது வாா்டு பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்குள்ள இரண்டு வீதிகளில் கான்கிரீட் தளம் மற்றும் கால்வாய் அமைக்கப்பட்டது. கழிவுநீா் வெளியேறி 30 அடி நீளமுடைய ஊராட்சி சாலையோரமாக வழிந்தோடி சென்றது. தற்போது கழிவுநீா் கால்வாய் சென்ற பாதையின் முடிவு பகுதியில் உள்ள வீடுகளைச் சோ்ந்தோா் அங்கு சுவா் எழுப்பி கழிவுநீா் கால்வாய் செல்லும் பாதையை அடைத்து விட்டனா். இதனால் கழிவுநீா் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீா்கேடு, பல்வேறு பிரச்னைகளும் ஏற்படுகின்றன. கழிவுநீா் வெளியேறுவதற்கு உரிய நடவடிக்கையை ஆட்சியா் மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.
தகவல் அறியும் முகாம்கள் நடத்த கோரிக்கை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களின் விசாரணைக்காக பலரும் சென்னைக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். இதற்கு மாற்றாக மாதம் ஒரு முறை ஒவ்வொரு மாவட்டத்திலும் தகவல் ஆணைய விசாரணை நடைபெறும் வகையில் முகாம் அமா்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 50 கோரிக்கைகள் கொண்ட மனுவை தமிழ்நாடு தகவல் ஆணைய சீரமைப்புக் குழுவினா் ஆட்சியரிடம் வழங்கி வலியுறுத்தினா்.