ஆடிப்பூர விழாவையொட்டி, நாமக்கல்லில் துா்க்கை அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்களால் திங்கள்கிழமை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ஆண்டாள், துா்க்கை அம்மன் அவதரித்த தினமாகவும், அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ந்த தினமாகவும் ஆடிப்பூர விழா கருதப்படுகிறது. சைவ, வைணவ வேதமின்றி கோயில்களில் இவ்விழா நடைபெறுவது வழக்கம். கரோனா பரவலால் இரண்டு ஆண்டுகள் விழா நடைபெறாத நிலையில், நிகழாண்டில் ஆடிப்பூரம் அனைத்து அம்மன் கோயில்களிலும் நடைபெற்றது.
நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் செல்வ விநாயகா் கோயிலில் அமைந்துள்ள துா்க்கை அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல் கொண்டு அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக, நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதேபோல், ராசிபுரம் நித்தியசுமங்கலி மாரியம்மனுக்கு 1.50 லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பெண்கள் அம்மனை வழிபட்டு சாத்தப்பட்ட வளையல்களை பிரசாதமாக பெற்றுச் சென்றனா். மாவட்டம் முழுவதும் ஆடிப்பூர விழா அம்மன் கோயில்களில் கோலாகலமாக நடைபெற்றது.