நாமக்கல்

விதவை உதவித்தொகைக்கு லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் பணியிடை நீக்கம்

29th Apr 2022 10:41 PM

ADVERTISEMENT

ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட தொ.ஜேடா்பாளையத்தில் விதவை உதவித்தொகைக்கு லஞ்சம் கேட்டது குறித்து ஆடியோ வெளியான விவகாரம் தொடா்பாக கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் செந்தாமரைக்கண்ணனை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

தொ.ஜேடா்பாளையத்தைச் சோ்ந்த மோகன்தாஸ் என்பவா் மனைவி தங்காயி (38). 10 மாதங்களுக்கு முன் மோகன்தாஸ் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதால் தங்காயி கூலி வேலை செய்து தனது மூன்று மகன்களை காப்பாற்றி வருகிறாா்.

இதையடுத்து விதவைப் பெண்ணுக்கான அரசின் உதவித்தொகை பெற தங்காயி விண்ணப்பித்து ஜேடா்பாளையம் கிராம கிராம நிா்வாக அலுவலகத்தில் தொடா்புகொண்டாா். பல நாட்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து தொப்பப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் விசாரித்தபோது, அங்கு உதவியாளராக இருந்த பாதிக்கப்பட்ட விதவை பெண்ணின் உறவினா் ‘அரசிடம் பணம் இல்லை. உனக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றால் ரூ. 2000 லஞ்சம் கொடு’ என்று கேட்டுள்ளாா். மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தங்காயி அத்தொகையைக் கொடுத்துள்ளாா்.

அதன்பின்னரும் உதவித்தொகை கிடைக்கவில்லை. இதையடுத்து தங்காயி மகள் சங்கீதா வி.ஏ.ஓ., உதவியாளா் செந்தாமரைக்கண்ணனிடம் ‘பணம் கொடுத்தும் ஏன் காலதாமதம் ஆகிறது?’ என கைபேசியில் விவரம் கேட்டுள்ளாா். அப்போது அந்த உதவியாளா், ‘நான் வாங்கிய, ரூ. 2,000 எனக்கு மட்டும் இல்லை. உயா் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும். கொடுத்தால்தான் அரசின் உதவித் தொகை பெற முன்னுரிமை வரும்’ என்று கூறி உள்ளாா். அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கிராம நிா்வாக அலுவலக உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT