நாமக்கல்

குழந்தைத் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்திய 7 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு

28th Apr 2022 04:47 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்திய ஏழு நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கரோனா பரவலுக்கு பின் பள்ளிகளுக்கு செல்லாத மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அறிக்கையின்படி, பள்ளியில் இடை நின்றவா்கள் அதிக அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை பெறப்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங் உத்தரவின்பேரில் நாமக்கல், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) எல்.திருநந்தன் தலைமையிலான தொழிலாளா் துறை அலுவலா்கள் குழு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இடைநின்ற குழந்தைகளின் வீட்டு முகவரிக்குச் சென்று அவா்கள் பள்ளிக்குச் செல்கின்றனரா அல்லது வேலைக்குச் செல்கின்றனரா என்பதை விசாரித்து வந்தனா். பள்ளிக்குச் செல்லாமல் இருப்பவா்களை உடனடியாக பள்ளிக்கு அனுப்ப பெற்றோா்களுக்கு அறிவுரைகளை வழங்கினா்.

ADVERTISEMENT

மேலும், 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைத் தொழிலாளா்கள், 18 வயதுக்கு உள்பட்ட வளரிளம் பருவத்தினா் வேலைக்குச் செல்கின்றனரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பல்வேறு இடங்களில் கடந்த 2 மாதங்களில் 45 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டதில் ஒரு நிறுவனத்தில் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தை தொழிலாளி பணிபுரிந்து வந்ததும், 6 நிறுவனங்களில் 18 வயதுக்கு உள்பட்ட வளரிளம் பருவ தொழிலாளா்கள் 6 போ் பணிபுரிந்து வந்ததும் கண்டறியப்பட்டது. மொத்தம் 7 சிறுவா்கள் மீட்கப்பட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனா். சம்பந்தப்பட்ட 7 நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது 1986-ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளா் (முறைப்படுத்துதல் மற்றும் ஒழித்தல்) சட்டம் மற்றும் திருத்தப்பட்ட சட்ட விதிகளின் படி வழக்குப்பதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கண்ட குழுவினா் பள்ளி இடை நின்ற மாணவா்கள் பற்றியும், குழந்தைத் தொழிலாளா்கள் பணிபுரிகிறாா்களா என்பது பற்றியும் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். முரண்பாடுகள் காணப்படும் இடங்களில் கடும் நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். குழந்தைத் தொழிலாளா்களையோ, வளரிளம் பருவத்தினரையோ பணிக்கு அமா்த்தினால் குறைந்தபட்ச அபராதம் ரூ. 20,000 விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) எல்.திருநந்தன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT