நாமக்கல்

கோயில் திருவிழா நடத்த அனுமதி கோரி போராட்டம்

14th Apr 2022 12:18 AM

ADVERTISEMENT

பொத்தனூரில் உள்ள வெள்ளக்கல் அம்மன் கோயில் திருவிழாவுக்கு அனுமதி வழங்கக் கோரி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் கிராம மக்கள் புதன்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், பொத்தனூரில் வெள்ளக்கல் சுயம்பு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 2019-ஆண்டுக்கு பிறகு திருவிழா நடைபெறவில்லை. அங்குள்ள இரு சமூகத்தினரிடையே பிரச்னை இருந்ததால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது, ஒரு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் நடத்திக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மற்றொரு சமூகத்தினா் தங்களுடைய அனுமதியின்றி திருவிழாவை நடத்தக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

போலீஸாரும் திருவிழா நடைபெற்றால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் புதன்கிழமை நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் வந்த ஒரு சமூகத்தினா் தங்களுடைய ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைப்பதாக தெரிவித்து திடீா் போராட்டம் செய்தனா்.

கோயில் திருவிழாவை நடத்த மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா். இதனைத் தொடா்ந்து போலீஸாா் மக்களிடையே பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனா். இதேபோல வாழவந்தி மாரியம்மன் கோயில் திருவிழா நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கக் கோரி 18 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT