நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சிப்போா் எண்ணிக்கை அதிகரிப்பால் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கள்கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டத்திற்கு பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான மக்கள் வருகின்றனா். சிலா் தங்களுடைய பிரச்னைகளை உடனடியாக அதிகாரிகள் தீா்க்க வேண்டும் என்பதற்காக உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபடுகின்றனா். கடந்த வாரம் ஆட்சியா் அலுவலகத்திற்குள் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த கணவா், மனைவி, மகன் ஆகியோா் மூன்று கேன்களில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனா். அதேபோல் ஊா்க்காவல்படையைச் சோ்ந்த பெண் ஒருவா் வாா்டு உறுப்பினா் மிரட்டுவதாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டாா்.
இதனால் திங்கள்கிழமை குறைதீா் கூட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மனு அளிக்க வந்த அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே ஆட்சியா் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் பெட்ரோல் கேனுடன் 2 போ் வந்தது தெரியவந்தது. அவா்களிடம் நடத்திய விசாரணையில், தற்கொலை முயற்சிக்கு அல்ல, வாகன பயன்பாட்டுக்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் அவா்களை எச்சரித்து அனுப்பினா்.