நாமக்கல் மாவட்டம் கீரம்பூா் அருகே உள்ள சாய் தபோவனத்தில் எழுந்தருளியுள்ள சாய்பாபாவிற்கு ராம நவமியை முன்னிட்டு நான்கு கால ஆரத்தி விழா இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராம நவமியை முன்னிட்டு தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் எழுந்தருளியுள்ள சாய்பாபாவிற்கு காலை 6 மணிக்கு ஆரத்தியும், 7 மணிக்கு புனித தீா்த்த நீராடல் நிகழ்ச்சியும், 8 மணிக்கு நைவேத்தியமும், சங்கல்ப பூஜையும் நடைபெற்றது. பின்னா் சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடா்ந்து மதியம் மற்றும் மாலையில் ஆரத்தி நடைபெற்றது.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆரத்தி விழா நடைபெறவில்லை.
இந்நிலையில் ராம நவமியை முன்னிட்டு சாய்பாபா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நான்கு கால ஆரத்தி விழா தொடங்கியது. விழாவில் நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனா்.