நாமக்கல்

சொத்து வரி உயர்வை கண்டித்து நாமக்கல்லில் அதிமுக ஆர்ப்பாட்டம்

5th Apr 2022 11:30 AM

ADVERTISEMENT

நாமக்கல்: தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் நாமக்கல் பூங்கா சாலையில் அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி பங்கேற்று கண்டன உரையாற்றினார். அப்போது, நகர்மன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து ஒரு வார காலத்திற்குள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 

தேர்தலின் போது திமுக வெற்றி பெற்றால் மக்கள் மீது வரிகளை திணிப்பார்கள் என்று தெரிவித்தோம். ஆனால் திமுகவிற்கு மக்கள் வாக்களித்தனர். தற்போது அதற்கு ஏற்ப வரி உயர்வு என்ற தண்டனையை மக்கள் அனுபவித்துக் கொண்டு இருகின்றனர். பொதுமக்கள் கஷ்டத்தை கண்டுகொள்ளாமல் மக்கள் மீது வரியை செலுத்தியுள்ளனர். 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக தொண்டர்கள்.

இனிவரும் நாட்களில் மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு போன்ற பல்வேறு நெருக்கடிகளை மக்களுக்கு திமுக அரசு அளிக்க உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் எவ்வித வரியும் செலுத்தாமல் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டது தான் அதிமுக ஆட்சி. திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டுக்குள் பல்வேறு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT

தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து உயர் கல்வி தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தனர். முறைகேடு நடைபெற்றதாக தவறான தகவலை திமுக சொல்கிறது. அப்படி என்றால் தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயன் பெற்ற பயனாளிகள் முறைகேடு செயல்களில் ஈடுபட்டார்களா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில் எந்த திட்டமும் இருக்கக் கூடாது என்ற நோக்கில் திமுக அரசு அம்மா கிளினிக், அம்மா மருந்தகம், அம்மா இரு சக்கர வாகனம் திட்டம் என தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகிறது.  நகைக்கடன் தள்ளுபடியிலும் பல ஏழை மக்களுக்கு திமுக அரசு உதவவில்லை என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பரமத்திவேலூர் எம்.எல்.எஸ்.சேகர், நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT