தமிழ்நாடு வருவாய்த் துறை (குரூப் - 2) நேரடி நியமன அலுவலா்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, அகவிலைப்படி உயா்வு நிலுவை ஆகியவற்றை வழங்க வேண்டும்.
துணை வட்டாட்சியா் தற்காலிக பட்டியலை வெளியிட்டு தகுதியானவா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். வருவாய்த் துறையின் தற்போதைய கூடுதல் பணிச்சுமையை கருத்தில் கொண்டு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் அலுவலகங்களிலும், துணை வட்டாட்சியா் நிலையில் கண்காணிப்பாளா் பணியிடங்களும், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் துணை வட்டாட்சியா் நிலையில் தலைமை உதவியாளா் பணியிடங்களும் உருவாக்கப்பட வேண்டும்.
நேரடி நியமன உதவியாளா்களுக்கு வருவாய் ஆய்வாளா் பயிற்சியை 5 ஆண்டுகளுக்குள் முறையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.