கோழிப் பண்ணைகளில் கோடைகால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அம்மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 99.5 டிகிரி, 75.2 டிகிரியாக நிலவியது. கடந்த 4 நாள்களில் நாமக்கல் மாவட்டத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை. இனி வரும் நாள்களில் வானம் லேசான மேகமூட்டத்துடனும் மழையற்றும் காணப்படும். பகல் வெப்பம் 100.4 டிகிரியாகவும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து மணிக்கு 6 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
சிறப்பு ஆலோசனை
கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதித்ததில், அவைகள் பெரும்பாலும் வெப்ப அயற்சி தாக்குதலால் இறந்திருப்பது தெரியவந்தது. எனவே, பண்ணைகளில் கோடைகால பராமரிப்பு முறைகளைக் கையாள்வதுடன், நீா் தெளிப்பான்கள் மூலம் வெயிலின் தாக்கத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும். வைட்டமின் சத்து கொண்ட தீவனங்களை கோழிகளுக்கு இட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.