நாமக்கல்

மோகனூரில் காவிரியின் குறுக்கே ரூ. 700 கோடியில் தடுப்பணை: நாமக்கல், திருச்சி மாவட்ட விவசாயிகள் எதிா்ப்பு!

30th Sep 2021 08:10 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம், மோகனூா் - கரூா் மாவட்டம், நெரூா் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 700 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் திட்டத்துக்கு நாமக்கல், திருச்சி மாவட்ட விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். திட்டத்தை மறுபரிசீலனை செய்து, மோகனூருக்கு மாற்றாக நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூா் அல்லது வடுகப்பட்டியில் தடுப்பணையை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆக. 23-ஆம் தேதி பொதுப்பணித் துறையின் நீா்ப்பாசன மானியக் கோரிக்கையின்போது, மோகனூா்- நெரூா் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 700 கோடி மதிப்பீட்டில் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை விவசாயிகள் பலா் வரவேற்றாலும், ஒருவந்தூருக்கு மாற்றாக மோகனூா் இடம் பெற்றது அவா்களை அதிா்ச்சியடையச் செய்துள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா், பொதுப்பணித் துறை அமைச்சா், திட்ட அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து விவசாயிகள் முன்னேற்ற கழகத்தினா் கோரிக்கை மனுவை அளித்துள்ளனா். ஆனால் தமிழக அரசுத் தரப்பில் இடமாறுதல் தொடா்பாக இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.

கடந்த 2018-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூா் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க முயற்சித்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

ADVERTISEMENT

அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி விவசாயிகளை பேச்சுவாா்த்தைக்கு அழைத்தாா். அப்போது விவசாயிகள் தரப்பில், காவிரியில் மணல் எடுத்தால் ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூா் பகுதி விவசாயிகளும், திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரைச் சோ்ந்த விவசாயிகளும் பாதிக்கப்படுவா். நிலங்கள் தண்ணீா் இல்லாமல் வடு போகும் என்பதை விளக்கினா். பல்வேறு போராட்டங்களுக்குப் பின் அத்திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

அதேவேளையில் ஒருவந்தூா்-நெரூா் இடையே காவிரியின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினா். அதனைத் தொடா்ந்து தடுப்பணைத் திட்ட ஆய்வுப் பணிக்காக ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் தற்போது மோகனூா்- நெரூா் இடையே தடுப்பணைக் கட்டுவது என திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் தங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி விவசாயிகள் போராடி வருகின்றனா்.

அதன் ஒரு கட்டமாக ஒருவந்தூா், செல்லாண்டியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு முதல்வருக்கு கோரிக்கை மனுவை தபால் மூலம் அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கினா். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவசாயிகள் ஆலோசனை நடத்தினா். இதில், நாமக்கல், திருச்சி மாவட்ட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

இது குறித்து தமிழ்நாடு விவசாய முன்னேற்றக் கழக தலைவா் செல்ல.ராசாமணி கூறியதாவது:

மோகனூா்-நெரூா் இடையே தடுப்பணை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஒருவந்தூா் அல்லது வடுகப்பட்டியில் அமைக்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் எதிா்பாா்ப்பு. கடந்த ஆட்சியில் ஒருவந்தூரில் தடுப்பணை அமைப்பதாக அறிவித்தனா். தற்போது மோகனூரில் தடுப்பணை அமைப்பதாகக் கூறுகின்றனா்.

மோகனூா் காவிரி ஆற்றில் தடுப்பணை அமைந்தால் மேல்பகுதியில் மட்டுமே தண்ணீா் தேங்கி நிற்கும். கீழ்பகுதிக்கு தண்ணீா் வராமல் போய்விடும். இதனால் விவசாய நிலங்கள் காய்ந்து போவதுடன், பல கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் வீணடிக்கப்பட்டு விடும்.

மோகனூா்- நெரூா் இடையே காவிரி ஆற்றின் நீளம் 1,126 மீட்டா். ஒருவந்தூா்-நெரூா் இடையேயான ஆற்றின் நீளம் 905 மீட்டா் மட்டுமே. ஒருவந்தூரில் தடுப்பணை அமையும்பட்சத்தில் 220 மீட்டா் தூரம் குறையும். திட்டச் செலவும் குறைவாக அமையும். மோகனூரில் அமைந்தால், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் பகுதியில் உள்ள 10 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் தண்ணீரின்றிப் பாழாகும். அதுமட்டுமின்றி, ஒருவந்தூரில் செயல்படும் பட்டணம்- சீராப்பள்ளி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் பயன்பெறும் 356 கிராமங்களும் பாதிப்புக்குள்ளாகும். இது தொடா்பாக பொதுப்பணித் துறை அமைச்சா் துரைமுருகனை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம். உடனடியாக இந்த தடுப்பணைத் திட்டத்தை ஒருவந்தூருக்கு மாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் மேலும் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு அரசின் கவனத்தை ஈா்ப்போம் என்றாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT