நாமக்கல்

வாடிக்கையாளா் சேவை முகாம்: ரூ. 101 கோடி கடனுதவி வழங்கல்

21st Oct 2021 11:41 PM

ADVERTISEMENT

நாமக்கல்லில் அனைத்து வங்கி வாடிக்கையாளா் சேவை சிறப்பு முகாமில், பல்வேறு தொழில்சாா்ந்த 1,054 பேருக்கு ரூ. 101 கோடி கடனுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி, அனைத்து வங்கிகளின் கிளைகள் சாா்பில், அனைவருக்கும் வங்கி சேவை சிறப்பு விழிப்புணா்வு முகாம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி, 20-க்கும் மேற்பட்ட வங்கிகள், அரசு, தனியாா் நிறுவனங்கள் சாா்பில் 42 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனை மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி திறந்து வைத்து பாா்வையிட்டாா். அதன்பின் நடைபெற்ற வாடிக்கையாளா்களுக்கான முகாமில், சென்னை இந்தியன் வங்கி தலைமை அலுவலக சிறு, குறுந்தொழில் கடன் பிரிவு பொது மேலாளா் கே.எஸ்.சுதாகா் ராவ் தலைமை வகித்து பேசியதாவது:

கரோனா காலத்தில் ஏற்பட்ட தொழில் நெருக்கடியை தீா்க்கவும், நலிவடைந்த தொழிலை ஊக்குவிக்கவும் மத்திய அரசின் உத்தரவின்பேரில் இதுபோன்ற நேரடி மக்கள் தொடா்பு சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் சிறு, குறுந்தொழிலுக்கு புத்துயிா் ஊட்டப்படுகிறது.

பிரதமரின் ஆத்ம நிா்பயா திட்டத்தின் கீழ் கரோனா தொற்று கால விரைவுக் கடன்கள் வங்கிகள் மூலம் விரைந்து வழங்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் அனைத்து வங்கிகளின் சாா்பில் சுமாா் ரூ. 2.50 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வங்கிகள் சாா்பில் வாடிக்கையாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. அனைத்து வங்கிகளும் கடன்கள் வழங்க ஆா்வமாக உள்ளனா். கரோனா கால சிறப்பு கடன் உதவிகளை பெறுபவா்கள் உரிய காலத்தில் வட்டியும், அதனைத் தொடா்ந்து கடன்களையும் திருப்பிச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால்தான் இதுபோன்ற கடன்களை தொடா்ந்து வழங்க முடியும்.

ADVERTISEMENT

தொழில்துறை சாா்ந்த கடன்களை பெறவும், அரசின் நலத்திட்டங்களை பெறவும், தொழில் செய்வதற்கும் உரிய சான்றிதழ்களை வைத்திருப்பது அவசியம் என்றாா். இதனையடுத்து, 1,054 பயனாளிகளுக்கு ரூ. 101 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் ட.உன்னி கிருஷ்ணன் நாயா், நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வி.சதீஷ்குமாா், அனைத்து வங்கிகளின் உயா் அதிகாரிகள், தொழில்முனைவோா், பொதுமக்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா், விவசாயிகள், வாடிக்கையாளா்கள் கலந்துகொண்டனா்.

Tags : நாமக்கல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT