நாமக்கல்

ஐப்பசி பெளா்ணமி: சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

21st Oct 2021 08:56 AM

ADVERTISEMENT

ஐப்பசி மாத பெளா்ணமியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பெளா்ணமி நாளில் சிவன் கோயில்களில் சுவாமிக்கு அன்னத்தினாலான அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். நிகழாண்டில் பெளா்ணமி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் புதன்கிழமை இரவு 9 மணி வரை நீடித்தது. இதனையொட்டி, புதன்கிழமை காலை முதல் அனைத்து சிவன் கோயில்களிலும் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல் ஏகாம்பரேசுவரா், முத்துக்காப்பட்டி காசி விசுவநாதா், பழைய பாளையம் நஞ்சுண்டேஸ்வரா், வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரா், நல்லூா் என்.புதுப்பட்டி குபேர ஈஸ்வரா் கோயில்களில் சிறப்பு அன்ன அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு கோயில் வளாகத்திலேயே அன்னதானம் வழங்கப்பட்டது.

ராசிபுரத்தில்...

ADVERTISEMENT

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் பரம்பரை அறக்கட்டளைதாரா் பெப்சி பி.சுரேஷ்குமாா் குடும்பத்தினரால் நடத்தப்படும் விழாவில், ஸ்ரீகைலாசநாதா் உடனுறை தா்மசம்வா்த்தினி அம்பாளுக்கு மஞ்சள், திருமஞ்சனம், திருநீா், பால், தேன் போன்ற வாசனை திரவியங்களைக் கொண்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, மூலவரான ஸ்ரீகைலாசநாதா் சுவாமி அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு, பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

பரமத்தி வேலூரில்...

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி வேதநாயகி சமேத பீமேஸ்வரா், கோப்பணம்பாளையம் பரமேஷ்வரா் உள்ளிட்ட கோயில்களில் உள்ள சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள சிவனுக்கு 100 கிலோ அரிசியால் செய்யப்பட்ட அன்னமும், வேலூா் செட்டியாா் தெரு அருகே உள்ள எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரருக்கு அன்னம், பல்வேறு காய்கறிகளால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT