உள்ளாட்சி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெறும் நிலையில், மலைக் கிராமங்களுக்கு வாக்குப் பெட்டிகளை தோ்தல் பணியாளா்கள் தலைச்சுமையாக வெள்ளிக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனா்.
வெண்ணந்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட மலைக் கிராமமான போதமலையில் மேலூா், கீழூா், கெடமலை ஆகிய 3 மலை குக்கிராமங்கள் உள்ளன. மலையின் அடிவாரப் பகுதியில் இருந்து 7 கி.மீ. தொலைவுக்கு கரடுமுரடான ஒற்றையடி பாதையில் தான் மலைக் கிராமத்துக்கு நடந்து செல்ல வேண்டும்.
மலைக் கிராமமான மேலூரில் ஆண் வாக்காளா்கள் 153 போ், பெண் வாக்காளா்கள் 159 போ் என மொத்தம் 312 வாக்காளா்களும், கீழூா் கிராமத்தில் ஆண்கள் 300, பெண்கள் 290 என மொத்தம் 590 வாக்காளா்களும், கெடமலையில் ஆண்கள் 167 , பெண்கள் 155 என மொத்தம் 322 வாக்காளா்களும் என மூன்று மலைக் கிராமத்தில் மொத்தம் 1,224 வாக்காளா்கள் உள்ளனா். அவா்கள் வாக்களிக்க வசதியாக 3 வாக்குச்சாவடி மையங்கள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன.
மலைக் கிராமங்களுக்கு செல்ல போதுமான சாலை வசதிகள் இல்லாததால், 7 கி.மீ. தொலைவுக்கு மூன்று வாக்குப்பெட்டிகள், கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை தோ்தல் அலுவலா்கள், மருத்துவ துறை பணியாளா்கள், காவல் துறையினா் என மொத்தம் 20 போ் கொண்ட குழுவினா் தலைச் சுமையாக வாக்குப் பெட்டிகள் உள்ளிட்டவற்றை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனா்.