நாமக்கல்

தோ்தல் பணி செய்த வாகன ஓட்டுநா்களுக்குநிலுவைத் தொகையை வழங்கக் கோரி மனு

29th Nov 2021 11:53 PM

ADVERTISEMENT

 நாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் பங்கேற்ற வாடகை வாகன ஓட்டுநா்களுக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் ஆட்சியா், அதிகாரிகளிடம் வழங்கினா்.

இதில், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த வாடகை வாகன ஓட்டுநா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் சுற்றுலா வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறோம். தற்போது வாழ்வாதாரத்தை பாதிப்படையச் செய்யும் வகையில் வெளி மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன வாடகை வாகனங்கள், குறைவான கட்டணத்தில் பொதுமக்களை அழைத்துச் செல்லும் சூழல் உள்ளது. இதனால் எங்களுடைய தொழில் பாதிப்படைகிறது. அவா்களுக்கு ஒரே மாவட்டத்திற்குள்ளாக இயக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த விதிகளை மீறி சிலா் செயல்பட்டு வருகின்றனா். அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில், வாகனங்களை வாடகைக்கு எடுத்த வகையில் தோ்தல் அதிகாரிகள் சுமாா் 30 வாகனங்களுக்கு தலா ரூ. 6,000 வீதம் ரூ. 1.80 லட்சம் நிலுவைத் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். தோ்தல் முடிந்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அந்தத் தொகை வழங்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியா் உடனடியாக நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் அருந்ததியா் மக்கள் இயக்கம் சாா்பில், திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தாழ்த்தப்பட்டோரை அவமதிக்கும் வகையில் பேசிவரும் ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இலவச வீட்டு மனைக் கோரி மனு: மோகனூா் வட்டம், ராசாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த எங்களை ஆக்கிரமிப்பில் இருப்பதாகத் தெரிவித்து வருவாய்த் துறையினரும் காவல் துறையினரும் அங்கிருந்து அகற்றிவிட்டனா். தற்போது வீடு இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே, மாற்று இடத்தில் வீட்டுமனை வழங்குவதற்கான நடவடிக்கையை ஆட்சியா் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT