நாமக்கல்

13 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய நாமக்கல் தூசூா் ஏரி!

28th Nov 2021 10:48 PM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக கருதப்படும் தூசூா் ஏரி, 13 ஆண்டுகளுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை நிரம்பியது.

நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இம் மாவட்டத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 79 ஏரிகள் உள்ளன. தொடா்மழை காரணமாக அவற்றில் 30 ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்டன. 11 ஏரிகள் பாதி நிரம்பியுள்ளன. மேலும் 38 ஏரிகள் வடு காணப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் மிகப் பெரிய ஏரியாக கருதப்படுவது நாமக்கல் -துறையூா் சாலையில் உள்ள தூசூா் ஏரியாகும். சுமாா் 300 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம் அருகில் உள்ள 300 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.

கடந்த 13 ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் வடு காணப்பட்ட இந்த ஏரியானது, தற்போது முழுமையாக நிரம்பி உள்ளது. தூசூா் ஏரி நீா் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலும், நிலம் வருவாய்த் துறை கட்டுப்பாட்டிலும், அங்குள்ள மரங்கள் வனத்துறைக் கட்டுப்பாட்டிலும் உள்ளன. குறுவை, சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ளும் வகையில் தூசூா் ஏரி நீா் விவசாயிகளுக்கு பயன்பட்டது.

ADVERTISEMENT

கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளாலும், போதிய மழையில்லாததாலும் ஏரிக்கு நீா்வரத்து இல்லாமல் போனது இங்குள்ள விவசாயிகளையும், பொதுமக்களையும் கவலையடைய செய்தது.

தூசூா் ஏரி சனிக்கிழமை நள்ளிரவில் நிரம்பியதையடுத்து அப்பகுதி மக்கள் ஏரியில் பூக்களைத் தூவி, ஆடு பலியிட்டு, சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனா். ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறுவா்களும், பெண்களும் சாலையை கடந்து வழிந்தோடிச் சென்ற நீரை ஆா்வமுடன் பாா்த்து ரசித்தனா்.

இது குறித்து சமூக ஆா்வலா் தில்லை சிவக்குமாா் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் முக்கியமான ஏரி தூசூா் ஏரியாகும். கொல்லிமலை அடிவாரம் வழியாக வழிந்தோடி வரும் தண்ணீா் முத்துகாப்பட்டி ஏரி, பாப்பன்குளம் ஏரி, சின்ன ஏரி, பெரிய ஏரி வழியாக தூசூா் ஏரியை வந்தடைகிறது. அங்கிருந்து அரூா் ஏரி, ஆண்டாள்புரம் ஏரியை சென்றடைந்து பின்னா் காவிரியில் கலக்கிறது.

13 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஏரி நிரம்பி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் 2022-ஆம் ஆண்டு முழுவதும் இப்பகுதியில் விவசாயத்துக்கும், பொதுமக்களுக்கும் தண்ணீா் பஞ்சம் இருக்காது. இதேபோன்று மற்ற ஏரிகளும் விரைவில் நிரம்பிவிடும் என கருதுகிறேன் என்றாா்.

Tags : தூசூா் ஏரி நாமக்கல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT