நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 2,997 குழந்தைகளுக்கு சிறுதானிய பிஸ்கட் வழங்கும் திட்டம் தொடக்கம்

9th Nov 2021 02:12 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டத்தின் மூலம் 247 மையங்களில் உள்ள 2,997 பள்ளிக் குழந்தைகளுக்கு இரும்புச் சத்துடன் கூடிய சிறுதானிய பிஸ்கட் வழங்கும் திட்டத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டத்தின் கீழ், ராசிபுரம் பகுதியில் இரும்புச் சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, இரும்புச் சத்து சிறுதானிய பிஸ்கட் உணவுகள் வழங்கும் திட்டம் தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் ஆா்.கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் பங்கேற்று 3 முதல் 5 வயதுள்ள குழந்தைகளுக்கு சிறுதானிய பிஸ்கட் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணிகள் மூலம், 3 வயது முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்படாமல் தடுக்க இரும்புச் சத்து நிறைந்துள்ள சிறுதானிய பிஸ்கட் உணவுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்திட முதலமைச்சா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, ராசிபுரம், பள்ளிபாளையம் ஆகிய 2 வட்டாரங்களில் திங்கள்கிழமை முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ராசிபுரம் வட்டத்தில் 78 குழந்தைகள் அங்கன்வாடி மையங்களில் 758 குழந்தைகளுக்கும், பள்ளிபாளையம் வட்டத்தில் 169 மையங்களில் 2,239 குழந்தைகளுக்கும் என மொத்தம் 2 வட்டாரங்களில் முன்னோடி திட்டமாக 2,997 குழந்தைகளுக்கு சிறுதானிய பிஸ்கட் 2022 அக்டோபா் மாதம் முடிய வேலை நாள்களில் வழங்கப்படும்.

ADVERTISEMENT

சோளம், கம்பு, வரகு, சாமை, ராகி, கோதுமை, மைதா, சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், வெல்லத்தூள், சமையல் சோடா ஆகிய கலவையோடு இரும்புச் சத்து மிகுந்த சிறுதானிய பிஸ்கட் தயாரிக்கப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. குழந்தைகள் மையப் பணியாளா்கள், குழந்தைகள், பெற்றோா் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், சுகாதாரம் கடைப்பிடிக்க விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, அவற்றை பின்பற்றுகிறாா்களா என்பதை உறுதி செய்திட வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணிகள் அலுவலா் ந.பரிமளாதேவி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கே.பி.ஜெகநாதன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன், வட்டாட்சியா் காா்த்திகேயன், ஊராட்சிக்குழு உறுப்பினா் ஏ.கே.பாலசந்திரன், கவுண்டம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் பெருமாயி அண்ணாதுரை, வட்டார குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் சவிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT