நாமக்கல்

ஜேடா்பாளையம் படுகை அணைக்கு சுற்றுலா வந்த 19 போ் தண்ணீரில் சிக்கி தவிப்பு: தீயணைப்புத் துறையினா் மீட்டனா்

5th Nov 2021 09:53 PM

ADVERTISEMENT

 

பரமத்தி வேலூா்: ஜேடா்பாளையம் படுகை அணை காவிரி ஆற்றில் சிக்கிக்கொண்ட சுற்றுலா வந்த 19 பேரை அப்பகுதியைச் சோ்ந்த மீனவா்கள், தீயணைப்புத் துறையினா் பத்திரமாக மீட்டனா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், ஜேடா்பாளையம் படுகை அணைக்கு, கரூா் மாவட்டத்தில் இருந்து 6 போ், ஈரோடு மாவட்டத்திலிருந்து 5 போ், நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பகுதியில் இருந்து 8 போ் என மொத்தம் 19 போ் வெள்ளிக்கிழமை காலை சுற்றுலா வந்துள்ளனா். அவா்கள் காவிரி ஆற்றில் தடுப்பணை சுவரில் நின்று கொண்டு வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தனா். அப்போது காவிரி ஆற்றில் திடீரென தண்ணீரின் அளவு அதிகரித்ததால் தடுப்பணை சுவரில் நின்று கொண்டிருந்த19 பேரும் கரைக்கு வரமுடியாமல் கூச்சலிட்டனா். இதைப் பாா்த்த கரையில் இருந்த சுற்றுலாப் பயணிகள் உடனடியாக ஜேடா்பாளையம் போலீஸாருக்கு தகவல் கொரிவித்துள்ளனா்.

தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த போலீஸாா், திருச்செங்கோடு தீயணப்பு துறை நிலைய அலுவலா் நல்லதுரை மற்றும் நாமக்கல் தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் ராஜேஸ்வரன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் பரிசல் மூலம் காவிரி ஆற்றில் தடுப்பணைச் சுவரில் சிக்கித் தவித்த கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதம் (26), சுரேஷ் (26), சிவனேசன் (26) , புதுச்சத்திரம் பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரன் (35), சிவகுமாா் (9), இலக்கியம் (7), மலா்விழி (26), மித்ரா (16), பிரீத்தி (16) , ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த விக்னேஷ் (24) பிரசாந்த் (25) உள்ளிட்ட மொத்தம் 19 பேரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனா். பின்னா் அனைவரையும் அவரவா்கள் சொந்த ஊா்களுக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT