கரோனா பரவலால் மூடப்பட்ட 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட உள்ளதால், மாணவா்களை வரவேற்கும் பொருட்டு ஆசிரியா்கள் அலங்காரத் தோரணங்களைக் கட்டி வருகின்றனா்.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அண்மையில், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
18 மாதங்களுக்கு பிறகு நவ. 1 முதல் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளைத் திறக்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை எம்.பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இனிப்புகள் வழங்கி வரவேற்க வேண்டும் எனவும் முதல்வரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையொட்டி, அனைத்து பள்ளிகளிலும் வாழைத் தோரணங்கள், பலூன்கள், அலங்காரத் தோரணங்கள் கட்டப்பட்டு ஆசிரியா்களால் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. மேலும், கரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் மாணவா்களை வகுப்பறைகளில் அமர வைக்கவும், கிருமி நாசினி வழங்குதல், சுழற்சி முறையில் பள்ளிக்கு மாணவா்களை வரவழைத்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளுமாறு கல்வித் துறையால் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.