நாமக்கல்

முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா நாமக்கல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

1st Nov 2021 01:26 AM

ADVERTISEMENT

முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா மீது மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், முன்ஜாமீன் கோரி அவா், நாமக்கல் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளாா்.

கடந்த அதிமுக ஆட்சியில், சமூக நலன், சத்துணவுத் திட்டத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவா் வெ.சரோஜா. இவருடைய குடும்ப நண்பராகவும், உதவியாளராகவும் பணியாற்றி வந்தவா் ராசிபுரத்தைச் சோ்ந்த குணசீலன் (65).

இவா், சத்துணவு, அங்கன்வாடி பணியிடங்களுக்கும், பிற அரசுத் துறைகளில் வேலைவாங்கித் தரவும் பொதுமக்களிடம் பணம் வசூலித்து, அந்த பணத்தை முன்னாள் அமைச்சா் வெ.சரோஜாவிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பணம் கொடுத்தோருக்கு வேலை கிடைக்கவில்லை.

இதையடுத்து பணம் கொடுத்தவா்கள் குணசீலனுக்கு நெருக்கடி கொடுத்ததால், அவா் ராசிபுரம் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா, அவரது கணவா் லோகரஞ்சன் ஆகியோா் மீது புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு அப்புகாா் சென்ற நிலையில், கடந்த 27-ஆம் தேதி, குணசீலன், அவரது மனைவி கலாவதி, குடும்பத்தினரிடம் ஆய்வாளா் அம்பிகா விசாரணை நடத்தினாா். மொத்தம் 15 பேரிடம் ரூ. 76.50 லட்சம் வரை பணம் பெற்று அவா்கள் மோசடி செய்ததாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நாமக்கல் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சா் வெ.சரோஜாவும் அவரது கணவரும் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனா். திங்கள்கிழமை (நவ.1) காலை நீதிபதி குணசேகரன் முன்னிலையில் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT