நாமக்கல்

டி.எம்.காளியண்ணன் காலமானார் : அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்

28th May 2021 04:22 PM

ADVERTISEMENT

டி.எம்.காளியண்ணன் கரோனா காரணமாக இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 101.

திருச்செங்கோடு அருகே குமரமங்கலத்தைச் சேர்ந்த முத்துநல்லிக்கவுண்டர், பாப்பாயம்மாள் ஆகியோருக்கு 1921 ஜன.10–ஆம் தேதி மகனாக பிறந்தார். ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் 50–க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய குமரமங்கலம் போக்கம்பாளையம் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். திருச்செங்கோட்டில் உயர்நிலைப்பள்ளியில் படிப்பை முடித்த அவர் மேல்நிலை கல்வியை சென்னை லயோலா மற்றும் பச்சையப்பா கல்லூரியில் பயின்றார். கல்லூரியில் பயிலும் காலத்திலேயே தேசப்பற்றுடன் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரம் காட்டினார். காந்திய வழியில் முழுமயைாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர், ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், வல்லபாய் பட்டேல், ராஜாஜி, காமராஜர் போன்ற பல்வேறு தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க இந்திய அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்டது. 1948–ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படாத சூழலில், சென்னை மாகாணத்தில் இருந்து அப்போதைய மக்களவைக்கு, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களாக 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவராக டி.எம்.காளியண்ணனும் தேர்வானார். அந்த 40 பேரில் கடைசி உறுப்பினராக டி.எம்.காளியண்ணன் மட்டும் 100 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து கொண்டிருந்தார்.  அவர் 1952–ஆம் ஆண்டு முதல் முறையாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் ராசிபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின், 1957–1962, 1962–1967–ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 

1969–இல் மக்களவைத் தேர்தலில்,அதே திருச்செங்கோடு தொகுதியில் இவர் போட்டியிட, மறைந்த திமுக பொதுச்செயலாளரான க.அன்பழகன், எதிர்த்து போட்டியிட்டு வென்றார். பின்னர், 1967 முதல் 1977 வரை சட்டமேலவை உறுப்பினராக(எம்எல்சி)பதவி வகித்தார். 1977, 1980–ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், மீண்டும் காங்கிரஸ் சார்பில் நின்றபோது, அத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொன்னையன் வெற்றி பெற்றார். இவை மட்டுமின்றி 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர், பொருளாளர் போன்ற பதவிகளை வகித்த அவர், கடந்த 2000–ஆம் ஆண்டுக்கு பின் மெல்ல மெல்ல அரசியலை விட்டு ஒதுங்கி கொண்டார். 

ADVERTISEMENT

பெரும் தலைவர்கள் இவரை ‘அரசியல் யாத்திரிகன்’ என செல்லமாக அழைப்பதும் உண்டு. ஒவ்வோர் தேர்தலின்போதும், பல்வேறு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவரிடம் வாழ்த்து பெற்று செல்வர். அவரது பிறந்த நாளன்றும் அரசியல் பிரமுகர்கள், அரசுத் துறை அதிகாரிகள், தொழிலதிபர்கள், உள்ளூர் பிரமுகர்கள், தியாகிகளின் வாரிசுகள், பொதுமக்கள் நேரடியாக இல்லத்துக்கு சென்று டி.எம்.காளியண்ணனிடம் வாழ்த்து பெற்று செல்வது வழக்கம். அதன்படி கடந்த ஜனவரி 10–ஆம் தேதி தனது 101–ஆவது பிறந்த நாள் விழாவை அவர் குடும்பத்தினர் மற்றும் திருச்செங்கோடு பகுதி மக்கள் உற்சாகமாக கொண்டாடினார். இந்த நிலையில் ஓரிரு நாள்களாக உடல் நலக்குறைவால் டி.எம்.காளியண்ணன் அவதிப்பட்டு வந்தார். 

இதனையடுத்து அவர் திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் அவர் காலமானார். டி.எம்.காளியண்ணனுக்கு ராஜேசுவரன், கிரிராஜ்குமார் என்ற இரு மகன்களும், சாந்தா, வசந்தா, விஜயா ஆகிய மூன்று மகள்களும் உண்டு. இதில் கிரிராஜ்குமார் காலமாகி விட்டார். 
தொடர்புக்கு: 9443221218

Tags : TM Kaliyannan
ADVERTISEMENT
ADVERTISEMENT