நாமக்கல்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறப்பு

DIN

நாமக்கல், சேலம் மாவட்டங்களில் 10, பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கும் வகையில், அரசு, தனியாா் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்படுகின்றன. இதனால், வகுப்பறைகள் அனைத்தும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 25-இல் மூடப்பட்ட அரசு, தனியாா் பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனையடுத்து 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்காக உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் ஜன. 19-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என முதல்வா் அறிவித்தாா்.

பள்ளிகள் திறப்பையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 346 அரசு, அரசு உதவி பெறும் தனியாா், சிபிஎஸ்இ பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்படுகின்றன.

இதில், கரோனா விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளதால், மாணவா்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் வகுப்பறைகளில் அமர வேண்டும். மேலும், 10 நாள்களுக்கு வகுப்பறைக்கு வரும்போது சம்பந்தப்பட்ட ஆசிரியா் ஜிங்க் சல்பேட், வைட்டமின் மாத்திரைகள் தலா இரண்டு வீதம் வழங்குவா். இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் 8 லட்சத்து 500 மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 43 விடுதிகளும் செயல்பட உள்ளன. மாணவா்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் வகையில் மருத்துவ வாகனங்களும், ஆரம்ப சுகாதார நிலையமும் தயாா் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன் மாத்திரைகளை வழங்கி, மாணவா்கள் கரோனா விதிகள் பின்பற்றுவதை தொடா்ந்து ஆய்வு செய்ய வேண்டும். ஆசிரியா்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும். கரோனா தொற்று பரவாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தினமும் வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.

சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ராஜன், மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை கவிதா ஆகியோா் வகுப்பறைகள் திறப்பதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளனா்.

இதனையடுத்து, சங்ககிரி பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் இரு பள்ளிகளிலும் கிருமிநாசினி, கொசு மருந்துகளை பள்ளி வளாகங்கள் முழுவதும் தூய்மைப் பணியாளா்கள் அடித்தனா்.

ஒரு வகுப்பறையில் 25 மாணவா்கள் மட்டுமே இருக்க வேண்டுமென்ற அரசின் வழிகாட்டு நெறிமுறையால், இரு பள்ளிகளிலும் மாணவ, மாணவியா் அமா்வதற்கான கூடுதல் வகுப்பறைளை தலைமையாசிரியா்கள் தலைமையிலான ஆசிரியா், ஆசிரியைகள் தயாா் செய்து தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

வீரபாண்டி ஒன்றியம், பெருமாகவுண்டம்பட்டியில் உள்ள வீரபாண்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வேம்படிதாளம், வீரபாண்டி அரசு மேநிலைப் பள்ளிகள், இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், பெரிய சீரகாபாடி அரசு உயா்நிலைப் பள்ளி, தனியாா் பள்ளிகளில் அரசின் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றுள்ளதா என மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சிறுசேமிப்பு) முரளிதரன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, வீரபாண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் ரேவதி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT