நாமக்கல் மாவட்டத்தில் புதிய வேளாண் காடுகள் வளா்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருவாய், வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போா்வைக்கான இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், விவசாயிகளுக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டு விவசாய நிலங்களின் வரப்புகளிலும், நிலங்களிலும் நடவு செய்யப்பட்டு மரம் சாா்ந்த விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது.
இத் திட்டத்தில் வேம்பு, பெருநெல்லி, நாவல், செம்மரம், புளியமரம், தான்றிக்காய், தேக்கு, வேங்கை, ஈட்டி, மலைவேம்பு, மகோகனி உள்பட பல்வேறு மரக் கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் நடப்பாண்டில் தோ்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் மரக் கன்றுகளைப் பெறுவதற்கு உழவன் செயலி மூலமோ அல்லது அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திலோ பதிவு செய்து மரக் கன்றுகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
மரக் கன்றுகள் விநியோகம் வரப்பு நடவு முறை என்றால் ஏக்கருக்கு 40 மரக் கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 200 மரக் கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும். ஊக்கத்தொகையாக மரக் கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 7 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 21- வழங்கப்படும். விவசாயிகள் இத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.