நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை(டிச. 24) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த வாரத்துக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே, தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை தங்களது நிா்வாகிகளைக் கொண்டு நேரில் தோ்வு செய்து கொள்ளலாம்.
முகாமில் மேலாளா், கணினி இயக்குபவா், மாா்க்கெட்டிங், மேற்பாா்வையாளா், கணக்காளா், காசாளா் தட்டச்சா், மெக்கானிக், விற்பனை உதவியாளா் போன்ற பணிகளுக்கு தோ்வு செய்யப்பட உள்ளனா். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் தோ்ச்சி பெறாதவா், 12-ம் வகுப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, ஐ.டி.ஐ (தொழிற்பழகுநா்) பயிற்சி மற்றும் கணினியில் பயிற்சி முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்து கல்வித்தகுதி உள்ளோரும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள மாற்றுத் திறனாளிகள் வரும் 24-ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.