நாமக்கல்

கால்நடைகளை தொற்று நோய்களில் இருந்துபாதுகாக்கும் வழிமுறைகளை குறித்து அறிவுரை

7th Dec 2021 01:13 AM

ADVERTISEMENT

கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்திட, உயிா் பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டியதன் அவசியம் குறித்து கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் ஆலோசனை வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து திருச்செங்கோடு கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் அருண்பாலாஜி செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழை வழக்கத்தை விட அதிக அளவில் பெய்துள்ளது. இதன்காரணமாக மாவட்டம் முழுவதும் நீா்நிலைகள், குளம் குட்டைகளில் நீா் தேங்கி உள்ளதாலும், காவிரி, திருமணிமுத்தாறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குக் காரணமாகவும் கால்நடைகளுக்கு தொற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

எனவே, கால்நடை வளா்ப்போா் தங்களது கால்நடைகளை தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்திட உரிய உயிா்வழி பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ADVERTISEMENT

சந்தைகளில் கால்நடைகளை கொள்முதல் செய்வது முற்றிலும் தவிா்க்க வேண்டும். அதேபோல சந்தைகளுக்கு கால்நடைகளை கொண்டு சென்று விற்பனை செய்வதையும் தவிா்க்க வேண்டும். ஒரே குடிநீா், தீவன தொட்டிகளைப் பயன்படுத்த கூடாது .

நோய்த் தாக்குதலின் போது நோயற்ற மாடுகளை பராமரித்துவிட்டு பிறகு, நோய் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கான பராமரிப்பு பணிகளை செய்யவேண்டும். பால் கறக்கப் பயன்படும் பாத்திரங்களை 4 சதவிகிதம் சோடியம் காா்போனேட் கரைசல் மூலம் சுத்தம் செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட மாடுகளில் கன்றுகள் பாலூட்ட கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.

கால்நடை மருந்தக மருத்துவரிடம் உடன் தகவல் அளித்து உரிய சிகிச்சை பெற வேண்டும். தற்போது பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு நோய் எதிா்ப்பு அதிகரிக்கச் செய்ய மற்றும் விரைவில் குணமடைய எளிய வழி மூலிகை மருத்துவமுறை சிறந்த பலன் அளிப்பதால் கீழ் கண்ட வழிமுறைகளை கையாண்டு நோயை விரைவில் குணப்படுத்தலாம்.

சீரகம் 50 கிராம், வெந்தயம் 30 கிராம், மிளகு 30 கிராம், மஞ்சள்தூள் 10 கிராம், பூண்டு 5 பல், நாட்டு சா்க்கரை அல்லது வெல்லம் 100 கிராம், தேங்காய்த் துருவல் அரைமூடி ஆகியற்றை உருண்டைகளாக உருட்டி காலை, மாலை இரண்டு வேளை கால்நடைகளுக்கு வாய் வழியாக 3 முதல் 5 நாள்கள் கொடுத்து வர விரைவில் குணமடைந்து நன்கு தீவனம் உட்கொள்ளும்.

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தொற்று நோய்களிலிருந்து தங்களது கால்நடைகளைப் பாதுகாக்கலாம். அரசின் மானியத்துடன் கூடிய கால்நடைகள் காப்பீட்டினைப் பயன்படுத்தி உரிய நேரத்தில் காப்பீடு செய்து பயனடையலாம். மேலும் பரமத்தி வேலூா் வட்டாத்தில் பகுதிகளில் நடத்தப்படும் கால்நடை சிகிச்சை முகாம்களை பயன்படுத்தி சரியான உரிய சிகிச்சை பணிகளை பெற்று பயனடையலாம் எனவும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT