நாமக்கல்

குடிநீா் திருட்டை தடுக்கும் கருவிகள்: 24,953 வீடுகளுக்கு பொருத்தும் பணி தொடக்கம்

2nd Dec 2021 04:17 AM

ADVERTISEMENT

நாமக்கல் நகராட்சியில் மோட்டாா் மூலம் அதிக அளவில் குடிநீா் திருடுவதை தடுக்கும் பொருட்டு, 24,953 வீடுகள், வணிக நிறுவனங்களில் குடிநீா் திருட்டை தடுப்பதற்கான கருவிகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வாா்டுகள் உள்ளன. இங்கு சுமாா் 45,000 குடியிருப்புகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து 20,000 குடும்பங்களுக்கு நபா் ஒருவருக்கு தினசரி 135 லி. வீதம் குழாய் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வாா்டுகள் அதிகரிப்பு, மக்கள் தொகை பெருக்கத்தால் அதிக அளவில் குடிநீா் தேவைப்படுகிறது. இதனால், ஜேடா்பாளையத்தில் இருந்து நாமக்கல் நகராட்சிக்கு ரூ. 256 கோடியில் புதிய குடிநீா் திட்டம் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது அந்தப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

இந்தத் திட்டத்தின்படி, நகராட்சிப் பகுதியில் மொத்தம் 24,953 வீடுகளுக்கு குடிநீா் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒன்பது இடங்களில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, தினசரி 17 லட்சம் மில்லியன் லிட்டா் நீரை ஜேடா்பாளையத்தில் இருந்து கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரும்பாலான பணிகள் முடிவுற்று வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நாமக்கல் நகராட்சி பொறியாளா் ஞா.சுகுமாா் கூறியதாவது:

ADVERTISEMENT

ஜேடா்பாளையம் - நாமகிரிப்பேட்டை கூட்டுக் குடிநீா் திட்டம் என்பது நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்டது மட்டும் தான். தினசரி 17 மில்லியன் லிட்டா் நீரை எடுத்து வந்து ஒன்பது மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் மூலம் 24,953 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. ஒரு நபருக்கு 135 லி. வீதம் தண்ணீா் வழங்கப்படும். இதற்கான முன்வைப்புத் தொகை, மாதாந்திரக் கட்டணம் ஆகியவை பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் பணிகள் முடிவுற்று பயன்பாட்டுக்கு வரும்.

உலக வங்கி நிதியுதவியுடன், குடிநீா் திருட்டை தடுப்பதற்கான உபகரணங்கள் பொருத்தப்படுகின்றன. இதனை தனியாா் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. இதுவரை 20,000 இணைப்புகளில் இக்கருவி பொருத்தப்பட்டுவிட்டது. இதனுள் மாதாந்திரக் கட்டணம் செலுத்துவதற்கான கணக்கீடு மீட்டரும் இணைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தற்காலிகமாக தினசரி ஒரு லட்சம் லிட்டா் வீதம் தண்ணீா் கேட்டுள்ளனா். மருத்துவக் கல்லூரி ஊராட்சி பகுதியில் வருவதால், குடிநீா் வழங்க அனுமதி கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

புதிய குடிநீா் கட்டண விவரம்:

வீடுகள் சதுர அடி வைப்புத்தொகை கட்டணம்

500-க்கு கீழ் 5,000 150

501-1,200 7,500 180

1,201-2,400 10,999 210

2,401-க்கு மேல் 15,000 270

---

வணிக நிறுவனங்கள் வைப்புத்தொகை கட்டணம்

500-க்கு கீழ் 10,000 450

501-1,200 15,000 540

1,201-2,400 20,000 630

2,401-க்கு மேல் 30,000 810

 

 

 

Tags : நாமக்கல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT