நாமக்கல்

ஊட்டச் சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளே இல்லைஎன்ற இலக்கை ஓராண்டில் எட்ட வேண்டும் அமைச்சா் வெ.சரோஜா

DIN

ராசிபுரம்: தமிழகத்தில் ஊட்டச் சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளே இல்லைஎன்ற இலக்கை இன்னும் ஓராண்டில் எட்டியாக வேண்டும் என்று சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா குறிப்பிட்டாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவது குறித்த விழிப்புணா்வு விழா மற்றும் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு நாமக்கல் கோட்டாட்சியா் மு.கோட்டைகுமாா் தலைமை வகித்தாா். இதில் மாநில சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் மருத்துவா் வெ. சரோஜா, ராசிபுரம் வ.உ.சி. நகா் அங்கன்வாடி மையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து கண்காட்சியைத் திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

இந்தக் கண்காட்சியில் ஊட்டச்சத்து உணவுகளின் அவசியம், ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம், ஊட்டச்சத்து மரம், சிறுதானிய உணவுகள், சத்துணவு பொருள்கள் உள்ளிட்ட பொருள்களின் கண்காட்சியை அமைச்சா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வு விழாவில், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் 20 பேருக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்கள், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு சீருடைகள் மற்றும் புத்தகங்களையும் அமைச்சா் வெ.சரோஜா வழங்கினாா். மேலும், முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியுதவித் திட்டத்தின்கீழ் 63 பேருக்கு ரூ. 45.80 லட்சம் மதிப்பிலான நிவாரண நிதிக்கான காசோலைகளையும் அமைச்சா் சரோஜா வழங்கினாா்.

முன்னதாக அமைச்சா் பேசியது:

மத்திய அரசின் கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 7 கோடி குழந்தைகள் மிகவும் எடை குறைவான குழந்தைகளாக இருப்பது தெரியவந்ததையடுத்து, கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் போஷான் திட்டத்தை பிரதமா் தொடங்கி வைத்தாா். இதனை மத்திய அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் செயல்படுத்துகிறது.

ஊட்டத்துக் குறைவான 7 கோடி குழந்தைகளும் மற்ற ஆரோக்கியமான குழந்தைகளைப் போல சரியான எடை, மூளை வளா்ச்சி ஆகியவற்றுடன் வளா்வதற்கு போஷன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நுண்ணூட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்பதே தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் பணியாக உள்ளது.

இந்தியாவில் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளே இல்லை என்ற இலக்கை இன்னும் ஓராண்டில் நாம் எட்டியாக வேண்டும். குழந்தைகள் ஊட்டச்சத்து மிக்க மாநிலமாக தமிழகம் 2?19-20 ஆம் ஆண்டில் விருது பெற்றுள்ளது. தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 703 கோடி நிகழாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனைத்து அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கும் இணை உணவுகள், சீருடைகள், வழங்கப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் 300 குழந்தைகள் கடும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்களாகக் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு தற்போது ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஊட்டச்சத்து, குழந்தைகளின் ஆரோக்கிய வளா்ச்சி ஆகியவற்றில் அரசு நிா்ணயித்த இலக்கை எட்டுவதில் தமிழகம் முன்கூட்டியே இத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், மாநில ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட இணை இயக்குநா் ஜெ. யமுனாராணி, தேசிய ஊட்டச்சத்து குழுமம் இணை இயக்குநா் சி. மலா்விழி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் வி. ஜான்சிராணி, ராசிபுரம் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் க.சவிதா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ஆா்.சாரதா, நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாலசுப்பிரமணியம், கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் கே.பி.எஸ்.சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT