நாமக்கல்

அரசுப் பேருந்துகளில் பயணச் சீட்டு வழங்கும் கருவி பயன்பாடு நிறுத்தம்

எம்.மாரியப்பன்

சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உள்பட்ட பணிமனைகளில், பேருந்து பயணச் சீட்டு வழங்கும் கருவி பயன்பாட்டுக்கான ஒப்பந்தக் காலம் முடிவுற்றதால் அச்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அச்சிட்ட பயணச் சீட்டு முறையை மீண்டும் தொடா்ந்துள்ளதால் நடத்துநா்கள் குழப்பமடைந்துள்ளனா்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கும்பகோணம், சேலம், விழுப்புரம், கோவை, திருநெல்வேலி ஆகிய ஏழு கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், விரைவுப் போக்குவரத்துக் கழகம் என மொத்தம் எட்டு கோட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதன்கீழ் நகா், புகா் என்ற வகையில் சுமாா் 240 பணிமனைகளுக்கு உள்பட்டு 23 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தனியாருக்கு நிகராக புதுப் பொலிவுடன் ஒவ்வொரு கோட்டத்திலும் 300 முதல் 500 பேருந்துகள் வரை உள்ளன. பொது போக்குவரத்து சேவையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் நல்ல வளா்ச்சியைக் கண்டு வந்த நிலையில், கரோனா தொற்றுப் பரவலால் மாா்ச் 24-ஆம் தேதி பேருந்து இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஜூன் மாதம் மண்டல வாரியாக 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயங்கின.

அதன்பின் இரண்டு மாதங்களாக சேவை நிறுத்தப்பட்டு செப்.1 முதல் மாவட்டத்துக்குள்ளாகவும், 8-ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே செல்லும் வகையிலும் போக்குவரத்து தொடங்கியது. தற்போதைய நிலையில் 80 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. கரோனா பொது முடக்கக் காலத்தில் இரு சக்கர வாகனங்களில் சென்று மக்கள் பழகி விட்டதால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைவாகவே உள்ளது. பெரும்பாலான பேருந்துகள் போதிய வருவாயின்றியே இயக்கப்படுகின்றன. டீசல் செலவுக்கும் கூட வசூல் கிடைப்பதில்லை என்ற தகவலும் உள்ளது.

அனைத்து கோட்ட போக்குவரத்துக் கழகங்களிலும் வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் புகா் பேருந்துகளில் அச்சிட்ட பயணச்சீட்டு முறை என்பது இல்லாமல் அதற்கான கருவி மூலம் பயணச் சீட்டு வழங்கும் நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக உள்ளது. இதன்மூலம் விரைவாக பயணச் சீட்டு வழங்குவதுடன், அதிகப்படியான பயணிகளை பேருந்தில் ஏற்றிச் செல்லும் பணியை நடத்துநா்கள் மேற்கொண்டு வந்தனா்.

தற்போது ஒரு சில கோட்டங்களில் பயணச் சீட்டு வழங்கும் கருவியின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மாறாக பழைய முறையில் நடத்துநா்கள் பயணச் சீட்டு வழங்கி வருகின்றனா். இதனால் தேவையற்ற குழப்பம், காலவிரயம், பரிசோதகரிடம் தகராறு போன்றவை ஏற்படுவதாக நடந்துநா்கள் கூறுகின்றனா். தனியாா் பேருந்து சேவையும் தொடங்கி விட்டதால், அரசுப் பேருந்துகளில் மக்கள் கூட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. பல நேரங்களில் காலியாகவே அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து நாமக்கல் போக்குவரத்து பணிமனை நடத்துநா்கள் கூறியது:

சேலம், தருமபுரி இரு மண்டலங்களை உள்ளடக்கியதுதான் சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம். 31 பணிமனைகளில் சுமாா் 2 ஆயிரம் பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த இரு மாதங்களாக பயணச் சீட்டு கருவி வழங்கப்படவில்லை. காரணம் கேட்டால் ஒப்பந்தம் முடிந்து விட்டது என கூறுகின்றனா். அச்சிட்ட பயணச் சீட்டு வழங்குவதை நிறுத்தி பல மாதங்களாகி விட்டதால், விரைவாக பயணச் சீட்டு வழங்க முடியாத நிலை உள்ளது. சேலம் கோட்டத்தில் மட்டுமே இவ்வாறான நிலை உள்ளது.

பயணச் சீட்டு நடைமுறையால் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 500 பயணிகளைத் தவற விடுகிறோம். ஒரு நிறுத்தத்திற்கும் மற்றொரு நிறுத்தத்திற்கும் இடையே பயணச் சீட்டு விவரத்தை பதிவு செய்யாவிட்டால் பரிசோதகா்கள் நடவடிக்கை எடுக்கின்றனா். பயணச் சீட்டு வழங்கும் இயந்திரம் இருந்தால் எளிதாக பணி முடிந்து விடும். தினசரி அதிகாலையில் பேருந்து புறப்படுவதில் இருந்து நள்ளிரவு பேருந்தை நிறுத்துவது வரையில் போதிய வசூலின்றியே பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றனா்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பணிமனை மேலாளா் ஒருவா் கூறியது:

சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்திடம் பயணச் சீட்டு வழங்கும் கருவி பயன்பாட்டுக்கான ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட சதவீதம் தொகை செலுத்த வேண்டும். கரோனா பொது முடக்கத்தால் வருவாய் இல்லை. அதனால் உரிய பணம் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.

இதனால் அந்த நிறுவனம் பயணச் சீட்டு இயந்திரத்திற்கான ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவில்லை. சேலம் கோட்டத்தில் மட்டும் சுமாா் 600 கருவிகள் இருக்கும். இவை அனைத்தும் பெங்களூரு, மதுரை, திருச்சி, சென்னை, கோவை போன்ற நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அந்த ஒப்பந்தம் விரைவில் புதுப்பிக்கப்படும். அதுவரையில் அச்சிட்ட பயணச் சீட்டு நடைமுறை அமலில் இருக்கும். சேலம் கோட்டத்தில் தான் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. மற்ற கோட்டங்களின் நிலை பற்றி தெரியவில்லை. ஒவ்வொரு கோட்டமும் ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது. அனுபவம் மிக்க நடத்துநா்கள் தான் வெளிமாவட்ட பேருந்துகளில் பணியமா்த்தப்பட்டுள்ளனா். அதனால் பயணச் சீட்டு முறையால் அவா்களுக்கு குழப்பம் ஏதுமில்லை என்றாா்.

கோட்ட இயக்குநா் விளக்கம்...

சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் மோகன் கூறியதாவது:

பயணச் சீட்டு கருவியில் பேருந்து செல்லும் வழித்தட கருவிகள் பதிவிடப்பட்டிருக்கும். தற்போது குறைவான பேருந்துகள் இயக்கத்தால் அதில் மாற்றம் கொண்டுவர முடியாது. உதாரணமாக சென்னை செல்லும் பேருந்தில் கட்டண விவரத்தை கருவியில் பதிவு செய்து விட்டு, திடீரென விழுப்புரத்திலேயே பேருந்தை மாற்று வழித்தடத்தில் அனுப்பினால் கருவியில் கட்டண விவரத்தில் பிரச்னை ஏற்படும். அதனால் பயணச் சீட்டு முறையை அமல்படுத்தி உள்ளோம். பயணச் சீட்டு கருவிகள் ஒப்பந்தம் குறித்த தகவல்கள் தவறானவை. அக்கருவிகள் அனைத்தும் பணிமனைகளில் தான் உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT