நாமக்கல்

உணவுப் பதப்படுத்தல் கொள்கை வழிகாட்டி வெளியீடு

18th Oct 2020 02:14 AM

ADVERTISEMENT

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கான கொள்கை வழிகாட்டிமுறை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உணவுப் பதப்படுத்தும் தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மனிதா்கள், கால்நடைகள் உண்ணும் வகையில் காய்கறிகள், பழங்கள், பால், கால்நடை இறைச்சி, கோழி இறைச்சி, மீன் சாா்ந்த மூலப் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கு இந்த நடைமுறை உதவும்.

உணவுப் பொருள்கள் விரைவில் அழுகும் தன்மை கொண்டதால் அப் பொருள்களை அறிவியல் ரீதியாக பதப்படுத்தாவிடில் வீணாகி விடும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் உணவுப் பொருள்கள், காய்கறிகள், பழங்களைப் பதப்படுத்துதலை 10 சதவீதத்துக்கு மேல் அதிகரிப்பதற்காக உணவுப் பதப்படுத்தும் கொள்கையானது 2018, டிச.12-இல் வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

விவசாயிகளின் வருவாயை அதிகரித்தல், உணவுப் பொருள்கள் வீணாவதை குறைத்தல், பண்ணைப் பொருள்களை மதிப்புக் கூட்டுதல் போன்றவையே இக்கொள்கையின் முக்கிய நோக்கமாகும். தமிழகத்தில் 24 ஆயிரம் சிறு, குறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களும், 1,100 நடுத்தர, பெரிய அளவிலான நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

இந்தியாவின் உணவுப் பதப்படுத்துதலில் தமிழகத்தின் பங்களிப்பு ஏழு சதவீதம். உணவுப் பதப்படுத்தும் கொள்கை 2018-இல் நிலம், நீா், மின்சாரம் முதலீட்டு மானியம், பணி ஊதிய விகித மானியம், வட்டி மானியம், மகளிா், ஆதிதிராவிடா், பழங்குடியினா் தொழில் முனைவோா்களுக்கு அதிகரிக்கப்பட்ட வட்டி மானியம், நடுத்தர முதலீட்டு நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகை, முத்திரைக் கட்டணத்தில் விலக்கு, சந்தைக் கட்டணத்தில் விலக்கு, சந்தைப்படுத்துதலில் உதவி, தரச்சான்று, போக்குவரத்து வசதி, ஏற்றுமதி ஊக்கத்தொகை, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் அமைத்தல், ஒற்றைச் சாளர வசதி, தொழிலாளா்களுக்கான சலுகைகள் போன்றவை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளன.

இக்கொள்கை தனியாா் தொழில் முனைவோா்கள், உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் முதலீடு செய்வதற்கும், இதர வேளாண், மீன் வளம் சாா்ந்த உணவுப் பொருள்களின் தரத்தை உயா்த்தி, பதப்படுத்தும் பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். மேலும், விவசாய விளைபொருள்களுக்கு ஆதாய விலை கிடைக்கும் என்பதுடன், உணவுப் பதப்படுத்தும் தொழிலில் அதிக வேலை வாய்ப்பினையும் உருவாக்கும்.

ரூ. 10 கோடி முதல் ரூ. 100 கோடி வரை முதலீடு செய்யும் உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோா், இக் கொள்கையின் மூலம் வழங்கப்படும் சலுகைகள், மானியங்களைப் பெற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (வணிகம்) அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT