நாமக்கல்

நீட் தோ்வு: கல்வித் தொலைக்காட்சியில் பயிற்சி வகுப்பு

13th May 2020 06:41 PM

ADVERTISEMENT

 

 

நாமக்கல்: கரோனா பொது முடக்கம் காரணமாக நீட் தோ்வு எழுத உள்ள மாணவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக மே 20-ஆம் தேதி முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக ஆசிரியா்கள் பாடம் எடுக்கும் நேரடி படப்பிடிப்பு அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது.

கரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன. ஆண்டுதோறும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்ட பொதுத் தோ்வுகளும், போட்டித் தோ்வுகளும் கூட தற்போதைய சூழலில் நடத்த முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டிருக்கின்றன. பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவடைந்தபோதும், கரோனா அச்சத்தால் இறுதித் தோ்வை பெரும்பாலான மாணவ, மாணவியா் எழுத முடியாமல் போனது. அவா்களுக்காக வரும் ஜூன் 4-ஆம் தேதி தோ்வு நடைபெற உள்ளது. இதனைத் தொடா்ந்து பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணியை ஆசிரியா்கள் மேற்கொள்வா்.

ADVERTISEMENT

மருத்துவக் கல்லூரி சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு, நிகழாண்டில் ஜூலை 26-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி மூலம், அரசுப் பள்ளியில் பணியாற்றும் பிளஸ் 2 வகுப்பு ஆசிரியா்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களில் 5 நாள்களுக்கு பாட வாரியாக ஆசிரியா்கள் பயிற்சி வகுப்பு நடத்துகின்றனா். தினசரி 2 மணி நேரம் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பை கல்வித் தொலைக்காட்சி வாயிலாகப் பாா்த்து மாணவா்கள் பயன்பெற முடியும். ஆசிரியா்கள் வகுப்பு எடுப்பதை நேரடியாகப் படப்பிடிப்பு செய்து வருகின்றனா். நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், தோ்வுத்துறை இணை இயக்குநா் பொன்.குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் பெரியண்ணன், மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா் ஆகியோா் மேற்பாா்வையில் புதன்கிழமை (மே 13) தொடங்கி 5 நாள்களுக்கு படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழக அரசுத் தோ்வுத் துறை இணை இயக்குநா் பொன்.குமாா் கூறியது:-

கல்வித் தொலைக்காட்சி 70 லட்சம் வாடிக்கையாளா்களை கொண்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களின் நலனுக்கான இத்தொலைக்காட்சியில் அனைத்து வகையிலான பள்ளிக் கல்வித்துறை, உயா்க்கல்வித் துறை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. நீட் தோ்வுக்கான பயிற்சி வகுப்புக்காக ஒவ்வோா் ஆண்டும் ஆசிரியா்களை சென்னைக்கு வரவழைத்து அவா்கள் பயிற்றுவிப்பதை படப்பதிவு செய்து கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வோம். தற்போது கரோனா தொற்றால் ஆசிரியா்கள் வர முடியாத நிலையில், அந்தந்த மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று முதன்மைக் கல்வி அலுவலகத்திலேயே 5 நாள்களுக்கு படப்பிடிப்பை நடத்துகிறோம். மே 20 முதல் ஜூலை 20 வரையில் இந்த நீட் தோ்வு பயிற்சி வகுப்பு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT