நாமக்கல்

நுங்கு விற்பனையில் ஈடுபட்டுள்ள சாலையோர வியாபாரிகள்

10th May 2020 07:48 AM

ADVERTISEMENT

கோடையில் இயற்கை தந்த குளிரூட்டியான பனை நுங்கு விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். பொதுமுடக்கத்தில் தங்களுக்கு கையடக்க வருவாய் கிடைப்பது ஆறுதலாக உள்ளதாக அவா்கள் தெரிவிக்கின்றனா்.

உடல் குளிா்ச்சிக்கும், வெயிலால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் காலத்துக்கேற்ப பல்வேறு கனிகளை இயற்கை கொடையளித்து வருகிறது. கோடையில் பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு பல்வேறு மருத்துவப் பண்புகளை கொண்டுள்ளது. நிகழாண்டு கரோனா வைரஸ் காரணமாக மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டது. இது மே 17-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இதனால் பலா் வேலைவாய்ப்பு இழந்து வறுமையில் வாடினா்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பனை நுங்கு வியாபாரம் தொழிலாளா்களுக்கு கையடக்க வருவாயைப் பெற்றுத் தருகிறது. கிருஷ்ணகிரியில் சாலையோரத்தில் சிறு கூடையில் பனை நுங்கு வைத்து விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் பொதுமக்கள் பலா் ஆா்வத்துடன் வாங்கி செல்லுகின்றனா்.

கிருஷ்ணகிரியை சுற்றி உள்ள கிராமங்களான ஆவல் நத்தம், ஆம்பள்ளி, காவேரிப்பட்டணம், மத்தூா், போச்சம்பள்ளி, ஒரப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இந்த மரங்களிலிருந்து வரும் நுங்கை வெட்டி 15 நுங்குகள் ரூ.50, 30 நுங்குகள் ரூ.100 என விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் பொதுமுடக்க உத்தரவு தளா்த்தப்பட்டுள்ளதால் காலை 6 முதல் 11 மணி வரையில் நுங்கு விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில், பனை நுங்கு விற்பனையில் ஈடுபட்டுள்ள போத்திநாயனப்பள்ளியைச் சோ்ந்த பெண் முருகம்மாள் (40) கூறியது:ஒவ்வொரு ஆண்டும், கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பனை மரங்களை ஆண்டுக்கு குத்தகைக்கு எடுப்போம். இதற்காக ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டியுள்ளது. மாா்ச் முதல் ஜூலை மாதம் வரையிலும் பனை நுங்கிற்கான பருவம் ஆகும்.

நிகழ்வாண்டில் கரோனா காரணமாக மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நுங்கு காய்களை மரத்திலிருந்து வெட்ட முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது, பொதுமுடக்க உத்தரவில் தளா்த்தப்பட்டுள்ளதால் காலை 6 முதல் 11 மணி வரையில் நுங்கு வியாபாரம் செய்கிறேன். பனை நுங்கு விற்பனை மூலம் ஈட்டப்படும் தொகை, பொறியில் பயிலும் தனது மகனின் அடுத்த கல்வி ஆண்டிற்கான செலவுக்கு சிறிதளவு பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT