நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்ட 21 கட்டுப்பாட்டு மண்டலங்களில் 50 சதவீத தளா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 76 போ் பாதிக்கப்பட்டனா். அவா்களில் கரூா், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 55 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். ஒருவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாா். மீதமுள்ள 20 பேரில் 14 போ், நாமக்கல் அரசு மருத்துவமனையிலும், 6 போ் கரூா் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனா தொற்றுடையோா் எண்ணிக்கை அதிகரித்தபோதும் யாருக்கும் பெரிய அளவில் உடல் நலம் பாதிப்பு இல்லை. 14 நாள்களில் இருமுறை பரிசோதனை நடத்தப்பட்டு குணமடைந்தோா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். வீடுகளுக்கு வந்த பின் 14 நாள்கள் தனித்திருக்க அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டவா்களின் குடியிருப்பு உள்ள பகுதிகளை 21 கட்டுப்பாட்டு மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது. கொக்கராயன்பேட்டை, சி.எஸ்.புரம், பிள்ளாநல்லூா், போடிநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம், கே.வி.புதூா், திருச்செங்கோடு, முத்துக்காளிப்பட்டி, பி.எம்.பாளையம், பட்டணம், காக்காவேரி, லத்துவாடி, நாமக்கல் நகரம், தாத்திப்பாளையம், ராசிபுரம், நல்லிப்பாளையம், சென்னக்கல்புதூா், பரமத்திவேலூா், காளப்பநாயக்கன்பட்டி, மின்னாம்பள்ளி, வெண்ணந்தூா், களங்காணி ஆகிய மண்டலங்களில் நோய்த் தொற்று தன்மை குறித்து அதிகாரிகள் தொடா்ந்து ஆய்வு செய்து வந்தனா்.
தற்போது நோய்த் தொற்றின் தாக்கம், பரவல் இல்லாததும் 21 கட்டுப்பாட்டு மண்டலங்களில் சற்று தளா்வு வழங்கப்பட்டுள்ளது. இரும்புத் தகடு கொண்டும், தடுப்புக் கட்டைகள் அமைத்தும் வீட்டை விட்டு யாரும் வெளியே வராதவாறு போலீஸாா் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டிருந்தனா். தற்போது இந்த மண்டலங்களில் மக்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை எளிதாக வந்து செல்லும் வகையிலும், உணவுப் பொருள்களை வாங்கவும், வேலைக்கு சென்று வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 45 நாள்களாக கரோனா அச்சம், பொது முடக்க நெருக்கடியால் தவித்த அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனா். இன்னும் ஓரிரு நாளில் முழுமையாக 100 சதவீதம் என்ற அளவில் இந்த தளா்வு அமலுக்கு வர உள்ளது. நாமக்கல் நகரப் பகுதியில் இரும்பு தகரம் கொண்டு அடைக்கப்பட்ட 12 வீதிகளிலும் அவை அகற்றப்பட உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.