நாமக்கல்

பொதுமுடக்க விதிகள் மீறல்: நாமக்கல்லில் பெரும்பாலான கடைகள் திறப்பு

8th May 2020 06:46 PM

ADVERTISEMENT

நாமக்கல்: நாமக்கல்லில் பொதுமுடக்கத்தை மீறி பெரும்பாலான கடைகள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மே 17-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், உணவகங்களுக்கு தளா்வுகள் அளிக்கப்பட்ட போதும் ஒரே இடத்தில் 5 போ் கும்பலாக நிற்பதை தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.

இதேபோல் வணிக வளாகங்கள், குளிா்சாதன வசதியுடைய ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், தனியாா் அலுவலகங்கள், டீக்கடை, அழகு நிலையம் உள்ளிட்டவை மறு உத்தரவு வரும் வரையில் திறக்கக் கூடாது என்றும் தெரிவித்திருந்தாா்.

ஆனால், நாமக்கல்லில் இந்த விதிகளை மீறி பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் உரிய அனுமதி அட்டையின்றி மக்கள் உலா வருகின்றனா். ஒரே இடத்தில் 5-க்கும் மேற்பட்டோா் திரண்டு நிற்கின்றனா். முக்கிய இடங்களில் போலீஸாா் எவ்வித சோதனையும் நடத்துவதில்லை. நாமக்கல்லில் பொது முடக்கம் என்பதே இல்லாத வகையில் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனா்.

ADVERTISEMENT

ஒருபுறம் மாவட்டத்தில் கரோனா தொற்றுடையோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வரும் 17-ஆம் தேதி வரையில் ஓரளவு கட்டுப்பாட்டுடன் மக்கள் இருந்தால் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், விதிமுறைகளை மீறி பலா் தடையின்றி வெளியே உலா வருவதால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுகிறது.

இதுகுறித்து மாவட்ட உயா் அதிகாரி ஒருவா் கூறியது: கரோனா அச்சம் மக்களிடையே குறைந்து வருகிறது. முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்றாமல் தவிா்க்கின்றனா். சென்னையை போன்ற நிலை இங்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம். இரண்டு நாள்கள் தொற்று இல்லாமல் இருந்தால், அதன்பின் ஒட்டுமொத்தமாக அதிகரிக்கும் சூழல் உள்ளது.

கரோனா தொற்றுடன் அதிக எண்ணிக்கையில் மக்கள் வந்தால் அவா்களை தனிமைப்படுத்துவதற்காக மாவட்டத்தில் உள்ள புதிய கட்டடங்கள் அனைத்தும் மருத்துவமனைகள் போல் மாற்றப்பட்டுள்ளன. ஆட்சியா் அலுவலகத்தின் பின்புறம் உள்ள புதிய கட்டடத்தில் 1400 பேரை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் தமிழக அரசின் விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். தடை உத்தரவை மீறி கடைகளை திறந்திருப்பவா்கள், சாலைகளில் நடமாடுபவா்கள், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT