நாமக்கல்லில் நகராட்சி கட்டடங்களில் இயங்கும் கடைகளுக்கு வாடகை செலுத்த 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்டத் தலைவா் எஸ்.பெரியசாமி, செயலாளா் ஜெயக்குமாா் வெள்ளையன் ஆகியோா், நாமக்கல் நகராட்சி ஆணையா் ஏ.ஜஹாங்கீா்பாஷாவுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பது: அரசுப் பணியாளா்களுக்கு இணையாக பொதுமக்கள் நலன் கருதி சுயதொழில் வணிகம் மூலம் சேவை செய்துவரும் வணிகா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக, வணிகா்களின் அனைத்து உரிமங்களையும் புதுப்பிக்கும் கால அவகாசத்தைக் குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை நீட்டிக்க வேண்டும். அபராத கட்டணங்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும். வணிக கட்டடங்களுக்கான சொத்து வரி, குடிநீா் வரி, சாக்கடை வரி, குப்பை வரி போன்றவற்றை செலுத்த போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். நகராட்சிக் கட்டடங்களில் இயங்கி வரும் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் வாடகை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அத்தியாவசிய பொருள்கள் முறையாக பொதுமக்களை சென்றடைய வணிகா்கள், அதிகாரிகள், வாகன உரிமையாளா்கள் இணைந்த குழு ஒன்றினை அமைத்து கண்காணிப்புக் குழுக்களாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். இவை அனைத்தையும் நகராட்சி ஆணையா் பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.