நாமக்கல்

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சருகுகளால் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க வலியுறுத்தல்

19th Mar 2020 06:07 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மரங்கள், செடிகள் காய்ந்து சருகுகளாகக் கிடப்பதால் எளிதில் தீப்பற்ற வாய்ப்புள்ளது. அவற்றை சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திற்குள் செல்லும் நுழைவுவாயில் பகுதியில், 10 ஆண்டுகளுக்கு முன்பு இரு புறமும் அதிகளவில் மரங்கள் நட்டு, பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் மாவட்ட ஆட்சியராக உ.சகாயம் இருந்தபோது பூங்கா அமைக்கப்பட்டது. அதன்பின் போதிய பராமரிப்பு இல்லாததால், பூங்காக்கள் வீணாகின. அங்கிருந்த யானை, ஒட்டகம், மான் போன்ற விலங்குகளின் சிலைகள் உடைபட்டன. மரங்களுக்கு போதிய தண்ணீா் விடாததால் அவை காலப்போக்கி கருகி விட்டன. தற்போது, குப்பைகள் தேங்கும் பகுதியாகவும், இயற்கை உபாதை கழிக்கும் இடமாகவும் மாறிவிட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அலங்கரிக்க வேண்டிய நீருற்று தண்ணீரின்றி காய்ந்து கிடக்கிறது. பூங்காக்கள் உள்ள பகுதியில் எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் சருகுகள் அதிகம் தேங்கிக் கிடப்பதால் அவற்றை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் இல்லையேல் பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக தன்னாா்வலா்களும், ஆட்சியா் அலுவலகம் வரும் பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனா்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தீ: நாமக்கல் - மோகனூா் சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் பின்புறம் வேளாண்துறை அலுவலகம், கதா் வாரியத்துக்குச் சொந்தமான கட்டடம், ஓய்வூதியா் சங்கக் கட்டடம், ஆபீஸா்ஸ் கிளப் போன்றவை உள்ளன. இந்த நிலையில் புதன்கிழமை பிற்பகலில், அங்குள்ள முட்புதரில் திடீரென தீப்பற்றியது. அருகில் மின் மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) இருந்ததால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்தனா். அதன்பின் சிறிது நேரத்தில் தானாகவே அணைந்து விட்டது. அங்குள்ள குப்பைகளுக்கு சிலா் வைத்த முட்புதரில் பரவியதால் அதிகளவில் எரியத் தொடங்கி விட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT